கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் இந்திய அரசு ஈடுபட்டுவருகிறது. அந்த வகையில், அரபு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க வந்தே பாரதம் திட்டத்தின் கீழ் அபுதாபியிலிருந்து கொச்சிக்கு ஏழாம் தேதி சிறப்பு விமானம் இயக்கப்பட்டது. இதில் ஐந்து கைக்குழந்தைகள் உள்பட 182 பேர் பயணம் செய்தனர்.
அப்போது, பயணிகளிடம் பேசிய ஏர் இந்தியா விமானத்தின் கேப்டன் அன்சுல் ஷியோரன், ”பயணிகள் அனைவரும் அரசு அறிவுறுத்தியுள்ள கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது எங்களின் கடமை.
கரோனா பெருந்தொற்று காலத்தில் பிற நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கு ஏழு வாரங்கள் தொடர்ந்து பணியாற்றவுள்ளோம், இந்திய கடற்படையும், விமானப்படையும் இணைந்து பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்டுவருகிறோம்.
இந்தக் கடினமான காலகட்டத்தில் உங்களது குடும்பத்தினருடன் இணைந்து மொத்த நாடே உங்களது வருகையை எதிர்பார்த்து காத்திருக்கிறது.
நீங்கள் அனைவரும், வரலாற்று சிறப்புமிக்க விமானத்தில் பயணித்து வருகிறீர்கள். கரோனா பெருந்தொற்றில் பல நாடுகளில் சிக்கியிருந்த அனைவரும் தற்போது புத்த பூர்ணிமா தினமான இன்று சொந்த ஊருக்கு செல்லவிருக்கிறீர்கள். விமானத்தில் பயணிக்கும் அனைவருக்கும் ரம்ஜான் தின வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
இதையும் படிங்க: 'சொந்த ஊருக்குத் திரும்பாதீர்கள்' - புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கோவா சி.எம்., வேண்டுகோள்!