அயோத்தியில் ராமர் கோயிலுக்கான பூமி பூஜை வரும் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் மோடி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் பங்குபெறவுள்ளனர். இந்தச் சூழ்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் 1992ஆம் ஆண்டு அயோத்தியில் கூடிய கரசேவகர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிடாதது பெருமையளிப்பதாக கூறியுள்ளார்.
தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "1992ஆம் ஆண்டு நான் முதலமைச்சராக இருந்தேன். அயோத்தியில் கூடியிருந்த கர சேவகர்களை சுடக்கூடாது என நான் உத்தரவிட்டிருந்தேன். கூடியிருந்த கர சேவகர்களை கட்டுப்படுத்த துப்பாக்கிச்சூடு நடத்தக்கூடாது என்றும் வேறு வழியில் அவர்களை கட்டுப்படுத்தவேண்டும் என்றும் கூறியிருந்தேன்.
அந்த முடிவை நான் ஏன் எடுத்தேன் என்றால் நாடு முழுவதும் இருந்து பல கர சேவகர்கள் அயோத்திக்கு வந்திருந்தனர். அப்போது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டிருந்தால், நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டிருக்கும். கர சேவகர்கள் ஒருவர் கூட கொல்லப்படவில்லை என்பதில் நான் பெருமையடைகிறேன்.
அந்தச் சம்பவத்திற்குப் பிறகு எனது ஆட்சி வீழ்ந்தது குறித்து கூட நான் கவலைப்படவில்லை. ஏனென்றால் நான் கடவுள் ராமர் மீது நம்பிக்கை வைத்திருந்தேன். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நடந்த போராட்டமானது 500 ஆண்டுகால போராட்டமாகும்.
1528ஆம் ஆண்டு பாபரின் தளபதி மிர் பாகி அயோத்தியில் ராமர் கோயிலை இடித்துவிட்டு மசூதியைக் கட்டி எழுப்பினார். இது, ஆன்மிக செயலாக அல்லாமல் இந்துக்களை அவமானப்படுத்தும் செயலாக இருந்தது . 500 ஆண்டுகால போராட்டத்திற்குப் பின்பு ராமர் கோயில் அதே இடத்தில் கட்டப்பட இருக்கிறது" இவ்வாறு கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மெஹபூபா முப்திக்கு வீட்டுச்சிறை நீட்டிப்பு: ப. சிதம்பரம் கண்டனம்!