ஹரியானா மாநிலம், ஃபரிதாபாத் மாவட்டம், பல்லப்கரில் கல்லூரி மாணவி ஒருவரை காரில் கடத்த அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று (அக்.26) முயற்சி செய்தனர். ஆனால், மாணவி முரண்பிடித்து அவர்களது பிடியிலிருந்து நழுவி அவர்களைப் பிடிக்க முயற்சித்ததால், அங்கிருந்து தப்பிக்க மாணவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு காரில் பறந்துள்ளனர். தொடர்ந்து, உடனடியாக அருகிலிருந்தவர்கள் மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி அங்கு அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து, இச்சம்பவத்தில் தவுபிக் என்பவரைக் கைது செய்த காவல் துறையினர், மற்றொரு நபரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஆனால், இதில் காவல் துறையினரின் செயல்பாடு சரியாக இல்லை எனத் தெரிவித்து, சிறுமியின் குடும்பத்தினரும் உறவினர்களும் திடீரென அவர்கள் காலனியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக கிடைத்த தகவலின்படி, குற்றச்சாட்டப்பட்டுள்ள தவுபிக் ஏற்கனவே மாணவிக்கு தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், அப்போது சமரசம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
போராட்டத்தின்போது, காவல் துறையினர் எனது மகள் உயிரிழக்கும் வரை காத்திருந்தனர். சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால், எனது மகளை காப்பாற்றியிருக்கலாம்.இந்தக் குற்றவாளிகளை உடனடியாக தூக்கிலிட வேண்டும். இவ்வழக்கை விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றிட வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.