ஜனநாயக நாட்டில் சட்டப்பூர்வமாக ஒன்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த குடிமக்களுக்கு அடிப்படை உரிமை உண்டு. ஆனால், அத்தகைய அடிப்படை உரிமைகளை நசுக்க அரசுகள் பலவேறு நடவடிக்கைகள் எடுக்கின்றன. இந்நிலையில்தான், உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு சமீபத்தில் இதுகுறித்து அளித்த தீர்ப்பு ஒரு கலங்கரை விளக்கமாகப் பார்க்கப்படுகிறது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அரசு நிர்வாகத்தின் அமைப்புகளின் உறுப்பினர்களுக்கும் அலுவலர்களும் அரசியலமைப்பு விதிகள் குறித்து நினைவுப்படுத்துவதாக வும் அமைந்தது.
கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததையடுத்து, காஷ்மீரில் தொலைப்பேசி, இணைய வசதிகள் ஆகியவை முடக்கப்பட்டன. மேலும் பல கட்டுப்பாடுகளையும் விதித்தன. இதை எதிர்த்து ’காஷ்மீர் டைம்ஸ்’ பத்திரிகையின் ஆசிரியரும், முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சருமான குலாம் நபி ஆசாத் உச்ச நீதிமன்றத்துக்கு சென்றுள்ளார்.
இதைத் தொடர்ந்து, நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டமும் அதனுடன் தொடர்புடைய தேசிய குடிமை ஆணையமும், நாட்டின் பல நகரங்களில் போராட்டங்களை ஏற்படுத்தியுள்ளன. இத்தகைய போராட்டங்களை, காஷ்மீரில் பின்பற்றப்பட்ட வழியிலேயே கட்டுப்படுத்த அரசு முயல்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே இதற்குச் சரியாக பதிலளித்துள்ளார். நீதிபதி பி.வி. ரமணா, நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி ஆர். சுபாஷ் ரெட்டி ஆகியோர் மூன்று முக்கிய விஷயங்கள் குறித்து விளக்கி, அரசுக்கு இருக்கவேண்டிய பொறுப்பை நினைவுப்படுத்தியுள்ளனர்.
அக்டோபர் 16ஆம் தேதி இதுகுறித்த உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருந்தாலும், தடை உத்தரவுகளை அரசு ரத்து செய்யவில்லை என்பதை உச்ச நீதிமன்ற அமர்வு தெளிவுபடுத்தியது. ஜனநாயக நாட்டில் வெளிப்படைத்தன்மைதான் மிக முக்கியமானது. எனவே இதுபோன்ற நீதிமன்றத்தின் உத்தரவுகளை நிறைவேற்றுவது என்பது அரசின் பொறுப்பாகும். எதேச்சையான மனப்பான்மை உடையவர்களைக் கண்கானிக்க அரசியலமைப்பு வழங்கிய மிக உன்னதமான உரிமை பத்திரிகை சுதந்திரம் என்பதை உச்ச நீதிமன்றம் அரசுக்கு நினைவூட்டியது.
மேலும், பத்திரிகை ஆசிரியர்களுக்கு கொடுக்கும் அழுத்தங்கள் சட்டப்பூர்வமானது அல்ல என்பதையும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. CRPCஇன் கீழ் பிறப்பிக்கப்படும் தடை உத்தரவுகளும் இணைய கட்டுப்பாடுகள் குறித்த உத்தரவுகளும் சட்டப்பூர்வமானவை அன்று என்பதையும் இது தெளிவுபடுத்தியது. இந்த உத்தரவுகள்தான் ஜனநாயகத்தைக் காக்கும் தீப்பொறிகள்.
இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்று பெருமை பேசுவது மட்டும் போதாது. ஆனால் துரதிருஷ்டவசமாக, சட்டப்பூர்வமான போராட்டங்களை அனுமதிக்காத தலைவர்களின் மத்தியில் ஜனநாயகம் என்பது மெல்ல மறைந்துவருகிறது. சமூகத்தில் சட்டம் ஒழுங்கிற்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்க 1861ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தடை உத்தரவுகள், இந்திய குற்றவியல் சட்டம், 1973ஆம் ஆண்டிலும் காணப்படுகிறது.
மக்கள் போரட அரசியலமைப்பு அளித்திருக்கும் உரிமைக்கும், போராடும் மக்கள் கட்டுப்பாட்டை மீறி சமூக அமைதியையும் பொதுச் சொத்துகளையும் சேதப்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய அரசின் பொறுப்பிற்கும் இடையில், ஒரு சமநிலையைப் பராமரிக்க வேண்டும். இதில் தோல்வி ஏற்படும் பட்சத்தில் தடை உத்தரவுகளில் தடியடியும் ரத்தக்களரிகளும் ஏற்பட்டுள்ளது. அரசியலமைப்பு மக்களுக்கு வழங்கியுள்ள அதிகாரம் கடுமையாக மீறப்படுகின்றன.
1970ஆம் ஆண்டில் 144 தடை உத்தரவின் அரசியலமைப்பு தன்மையை உச்ச நீதிமன்றம் மறுஆய்வு செய்தது. அதில் 144 தடை உத்தரவை எப்போது பயன்படுத்த வேண்டும், எந்த அடிப்படையில் பயன்படுத்த வேண்டும் என்றும் தெளிவாக எடுத்துரைத்துள்ளது. 144 தடை உத்தரவை விதிக்கும்போது அரசியலமைப்பின் 19ஆவது பிரிவில் விளக்கப்பட்டுள்ள ’நியாயமான கட்டுப்பாடுகள்’ குறித்தும் நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது. 144 தடை உத்தரவு நியாயமான முறையில் பயன்படுத்தப்படுகிறதா என்றும் ஆராயப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு எப்போது பயன்படுத்த வேண்டும் உள்ளிட்டவற்றை பற்றி 2016-17ஆம் ஆண்டே தெளிவாக நீதிமன்றம் விளக்கியுள்ளது. ஆனால் எந்தவொரு அரசும் அந்த வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதாக தெரியவில்லை.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றபோது, 22 கோடி மக்கள்தொகையைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் வெறும் ட்விட்டர் அறிவிப்பு மூலம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எந்தவொரு போராட்டமும் வன்முறையாக மாறக்கூடும் என்ற போலி காரணத்தால், அனைத்துப் போராட்டங்களின்போதும் அரசு தடை உத்தரவுகளை பிறப்பிக்க முடியுமா என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ஆந்திர தலைநகரிலுள்ள தலைவர்களின் மீது சிறிதளவே தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இங்குதான் அமைதியான ஆர்ப்பாட்டங்களும் தடியடிகள் மூலம் அதிகமாக கையாளப்படுகிறது.
மக்களின் போராட்டங்களையும் உணர்வுகளையும் அடக்கும் ஒரு கருவியாக 144 தடை உத்தரவுகளை அரசு பயன்படுத்தக்கூடாது என்பதை மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு தெளிவுபடுத்தியுள்ளது. சட்டம் ஒழுங்குக்கு ஆபத்து இருப்பதாக அரசு உணரும்போது மட்டுமே தடை உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும் என்பதையும் நீதிமன்ற உத்தரவு தெளிவாக விளக்குகிறது. கண்மூடித்தனமாக விதிக்கப்படும் தடை உத்தரவுகள் நியாயமானவை அல்ல. இது போன்ற தடை உத்தரவுகள் அனைத்தும் மறுஆய்வுக்கு உட்பட்டவை; மேலும் இவை பகிரங்கமாக மக்கள் மத்தியில் அறிவிக்க வேண்டும், இது பாதிக்கப்பட்ட மக்கள் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டவும் உதவும். உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுகள் உண்மையிலேயே பாராட்டத்தக்கவை.
சர்வதேச அளவில் ஈரான், சூடான் ஆகிய நாடுகளுக்கு அடுத்து இந்தியாதான் அதிக முறை இணையத்துக்கு தடைவிதிக்கும் நாடாக உள்ளது. இதனால் சுமார் ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது. இணைய உரிமைகளைத் தடுப்பதும் நிறுத்துவதும் குடிமக்களின் அடிப்படை உரிமையின் கீழ் வரும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், இதற்கான நிபந்தனைகளையும் நீதிமன்றம் வரையறுத்துள்ளது.
2017இல் வரையறுக்கப்பட்ட விதிகளில் 'தற்காலிகமாக' (temporarily) என்ற வார்த்தையை முறையாக வரையறுக்காத விதிகளைச் சரிசெய்ய நீதிமன்றம் அரசைக் கேட்டுக்கொண்டது. அதுவரை இணைய சேவையை மீண்டும் வழங்குமாறும் அரசுக்கு அறிவுறுத்தியது. நாம் 70 ஆண்டுகள் ஜனநாயக நாடாக இருந்தபோதும், ஜனநாயகத்தின் உணர்வை மத்திய அரசுக்கோ மாநில அரசுக்கோ தெளிவாக கற்பிக்க முடியவில்லை. பொதுமக்களுக்கு அரசியலமைப்பு அளித்துள்ள உரிமைகளைப் பாதுகாக்க நீதித்துறை எடுத்துவரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது. இது எதிர்காலத்திற்கான கலங்கரை விளக்கமாக அமையும்.
இதையும் படிங்க: வாழ்வதற்கான உரிமையை உறுதிபடுத்துமா நகராட்சி அமைப்புகள்?