கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள செல்லனம் கிராமம் கடலோரத்தை ஒட்டி அமைந்துள்ளதால் பருவ மழைக்காலங்களில் கடல்நீர் ஊருக்குள் புகுந்துவருகின்றது. அதனால் அப்பகுதி மக்கள் கடல்நீர் ஊருக்குள் புகாதபடி தடுப்புச்சுவர் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அதன்படி தடுப்புச்சுவர் கட்டும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்த நிலையில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஒருவர் செல்லனம் தடுப்புச்சுவர் கட்டுவதில் அரசு தாமதம் காட்டுகிறது. எனவே அதனை விரைந்து முடிக்க அரசுக்கு உத்தரவிடுமாறு கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதனை விசாரித்த நீதிபதி வி.ஜி.அருண், தடுப்புச் சுவர் கட்டுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து விளக்கம் அளிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டார். அதில் அரசு தரப்பில் பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டன.
அதன்பின் நீதிபதி, இந்தாண்டு பருவமழை தொடங்கவிருப்பதால் அதனைக் கருத்தில் கொண்டு, "செல்லனம் மக்களையும் அவர்களது உடைமைகளையும் பாதுகாக்க உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.