புதுச்சேரி வங்கியாளர்கள் கூட்டம் தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முதலமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர், நாடு முழுவதும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் சரிந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில், மத்திய அரசு விவசாயம், தொழிற்சாலைகள் என பல்வேறு துறைகளுக்கு சுமார் 20 லட்சம் கோடி ரூபாய்க்கு திட்டங்களை அறிவித்துள்ளது.
புதுச்சேரி அரசும் கரோனா நிவாரணமாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 2 ஆயிரம் ரூபாய் வழங்கியது. அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டட தொழிலாளர்களுக்கும் தனித்தனியே நிதியுதவிகளை வழங்கினோம். சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவியும் வழங்கப்பட்டது. விவசாயிகளுக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டது. இந்த உதவித்தொகைகள் அனைத்தும் வங்கிகள் வழியாகவே வழங்கப்பட்டது. கரோனாவுக்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும், தற்போது புதுச்சேரி உள்பட நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.
இந்த இக்கட்டான காலகட்டத்தில் மக்களின் உயிரும் முக்கியம். அதே நேரத்தில் மாநில பொருளாதாரத்தை காக்க வேண்டியதும் அவசியம் என்பதே புதுச்சேரி அரசின் கொள்கை. இந்நேரத்தில் வங்கிகளின் உதவி மிகவும் தேவையாக உள்ளது. குறிப்பாக, பொருளாதாரத்தை காக்க விவசாயிகள், தொழிற்சாலைகளுக்கு வங்கிகள் தேவையான அளவு கடன் வழங்க வேண்டும் எனக் கூறினார்.