பிகாரில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசின் பதவிக்காலம் நவம்பர் 29ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து, 7.29 கோடி வாக்காளர்களைக் கொண்டுள்ள அம்மாநிலத்தின் 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் மூன்று கட்டங்களாக நடத்தப்படவுள்ளது.
இரண்டு முக்கிய அரசியல் கூட்டணிகளாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான மகா கூட்டணியும், முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியும் நேருக்கு நேர் அரசியல் சண்டையிடுவதால் தற்போது தேர்தல் பரப்புரைக் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
பரப்புரை களத்தின் பல்வேறு இடங்களில் பல சுவரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரசாத் யாதவின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ராயின் தந்தையும், ஜே.டி.யூவின் வேட்பாளருமான சந்திரிகா ராயை ஆதரித்து பார்சா சட்டப்பேரவைத் தொகுதியில் பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இன்று பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது, அவரது பரப்புரை கூட்டத்தில் புகுந்த ஒருவர் "லாலு பிரசாத் வாழ்க !" என முழக்கமிட்டார்.
இதனால் தன்னிலை இழந்த முதலமைச்சர் நிதிஷ் குமார், " உங்களுக்கு என் மீது நம்பிக்கை இல்லை என்றால், எனக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டாம். ஆனால், தயவுசெய்து கூட்டத்தில் தொல்லை தர வேண்டாம்" என சத்தமிட்டார்.
இதனால் கொதிப்படைந்த அவரது ஆதரவாளர்கள் முழக்கமிட்ட நபரை நோக்கி ஆவேசமாக ஓடினர். இதனைக் கண்ட நிதிஷ் குமார், "நீங்கள் அந்த நபரை தாக்கினால் அது இங்கே இருக்கும் மக்களிடம் நமக்கு கெட்டப் பெயரை மட்டுமே உருவாக்கும். எனவே, இதுபோன்ற காரியங்களைச் செய்ய வேண்டாம்" என்று கூட்டத்திற்கு அறிவுறுத்தினார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த தேஜஸ்வி பிரதாப், "நிதீஷ் ஜி மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சோர்ந்து போயிருக்கிறார்" என கூறியுள்ளார்.