குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடிய காங்கிரஸ் தொண்டரும், பெண் சமூக செயற்பாட்டாளருமான சதாப் ஜாபர் உத்தரப் பிரதேச காவலர்களால் கைது செய்யப்பட்டார். அவருக்கு நீதிமன்ற பிணை தொடர்ந்து மறுக்கப்பட்டுவருகிறது.
இந்த நிலையில், சதாப்பின் வீட்டிற்குச் சென்று, அவரது குழந்தைகள் மற்றும் உறவினர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆறுதல் கூறினார். தொடர்ந்து பிரியங்கா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உத்தரப் பிரதேச அரசு உணர்ச்சியற்று செயல்படுகிறது. சதாப்பின் குழந்தைகள், அவரது வயதான தாயாரும் வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கின்றனர்’ என்று பதிவிட்டிருந்தார்.
இது குறித்து உத்தரப் பிரதேச அரசை விமர்சித்து பிரியங்கா காந்தி பதிவிட்ட மற்றொரு ட்வீட்டில், ”போராட்டத்தை பேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்பிய சதாப் ஜாபரை தகுந்த ஆதாரங்கள் ஏதுமின்றி கைது செய்தது மனிதாபிமானத்தை மீறும் செயல்” என்றார்.
கடந்த சனிக்கிழமை பிரியங்கா காந்தி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கைதான ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அலுவலர் எஸ்.ஆர். தாராபுரியின் வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதுகுறித்து பேசிய பிரியங்கா, “77 வயதான தாராபுரி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை அரசு சட்டவிரோதமாக கைதுசெய்து அடைத்து வைத்துள்ளது” என்றார்.
முன்னதாக, தாராபுரி குடும்பத்தினரை பிரியங்கா சந்திக்க சென்றபோது, காவலர்கள் அவரைத் தடுத்து நிறுத்தினர். அப்போது பெண் காவலர் ஒருவர் தன் கழுத்தைப் பிடித்து இழுத்ததாக பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியிருந்தார். அதற்கு காவல் துறையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சி.ஏ.ஏ.வுக்கு ஆதரவளித்த பெண் எம்எல்ஏவை கட்சியைவிட்டு நீக்கிய மாயாவதி