காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரிங்கா காந்தி, 1997ஆம் ஆண்டு முதல் வசித்துவந்த அரசு பங்களாவை காலி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எஸ்பிஜி பாதுகாப்பு திரும்பப்பெறப்பட்டதால், ஆகஸ்ட் 1ஆம் தேதிக்குள் டெல்லியில் உள்ள அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என அவருக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, அந்த பங்களா பாஜக மாநிலங்களவை உறுப்பினர் அனில் பலுனிக்கு ஒதுக்கப்பட்டது.
இதனிடையே, தனது பங்களாவிற்கு வந்து உணவருந்தும்படி அனிலுக்கு பிரியங்கா அழைப்பு விடுத்தார். ஆனால், உடல்நிலையை காரணம் காட்டி லோதி பங்களாவுக்கு செல்ல அனில் மறுத்துவிட்டார். அதற்கு பதிலாக, வீடு காலி செய்து பங்களாவிற்கு சென்ற பிறகு, தான் அளிக்கும் விருந்தில் பிரியங்கா கலந்துகொள்ள வேண்டும் என பாஜக ஊடக பொறுப்பாளராக உள்ள அனில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து பிரியங்கா தனது ட்விட்டர் பக்கத்தில், "அனிலிடமும் அவரது மனைவியிடமும் பேசினேன். அவர் விரைவில் நலம் பெற பிரார்த்தனை மேற்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் பிரதமர் உள்ளிட்ட மிக முக்கிய தலைவர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு படை (எஸ்பிஜி) பாதுகாப்பு அளிக்கப்பட்டுவருகிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் குடும்பத்தினரான சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு அளிக்கப்பட்டுவந்த எஸ்பிஜி பாதுகாப்பு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் திரும்பப்பெறப்பட்டது. எஸ்பிஜி, Z ப்ளஸ் பாதுகாப்பில் உள்ள நபர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு மட்டுமே டெல்லியில் அரசு பங்களா ஒதுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிரதமர் வருகையை முன்னிட்டு உ.பி.யில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்