இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் தொற்று தற்போது மிக வேகமாக பரவிவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆங்காங்கே சிக்கித் தவிக்கின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அடுத்த ஒரு மாதத்திற்கு வாய்ஸ் கால் சேவையை இலவசமாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதை வலியுறுத்தி ஏர்டெல், வோடஃபோன், பிஎஸ்என்எல், ஜியோ உள்ளிட்ட டெலிகாம் நிறுவனங்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், "நெருக்கடியான இந்த நேரத்தில் நாட்டு மக்களுக்கு உதவுவது நம் கடமை. வீட்டுக்கு செல்ல நினைக்கும் பலரது கைகளில் தற்போது பணம் இல்லை. அவர்களால் தங்கள் குடும்பத்தைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.
எனவே, அடுத்த ஒரு மாதத்திற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் குடும்பங்களை எளிதில் தொடர்புகொள்ள வசதியாக சம்பந்தப்பட்ட பகுதிகளில் வாய்ஸ் காலை டெலிகாம் நிறுவனங்கள் இலவசமாக வழங்க முன்வர வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஊரடங்கு உத்தரவால் சிரமப்படும் மக்களுக்கு உதவுமாறு காங்கிரஸ் தலைவர்களை இக்கடிதத்தில் பிரியங்கா காந்தி கேட்டுக்கொண்டார். முன்னதாக, கோவிட்-19 வைரஸ் தொற்று தொடர்பாக மாநிலங்கள் வாரியாக கண்காணிப்பு குழுக்களை அமைக்க காங்கிரஸ் தலைமை, மாநில காங்கிரஸ் கமிட்டிகளுக்கு அறிவுறுத்தியிருந்தது.
இதையும் படிங்க: இந்தியாவில் கரோனா பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டியது!