உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி உள்ளார். அம்மாநிலத்தில் உள்ள பிரச்னைகளுக்கு ஆதரவாக அவ்வப்போது குரல் கொடுத்து வருகிறார். இதன் மூலம் மக்கள் மனதில் காங்கிரஸ் கட்சியை மீண்டும் இடம் பெற வைக்க முயற்சித்து வருகிறார். தற்போது உத்தரப்பிரதேசத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, நடந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்களைச் சந்தித்துப் பேசி வருகிறார்.
இந்நிலையில், பிரியங்கா இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசி தொகுதிக்குச் சென்றார். சீர் கோவர்த்தன்பூர் மடத்தில் நடைபெறும், ஸ்ரீகுரு ரவிதாஸ் பிறந்த நாள் விழாவில் பங்கேற்கும் பொருட்டு, இன்று அவர் நண்பகல் 12:30 மணிக்கு வாரணாசி சென்றார். தொடர்ந்து, அங்குள்ள காங்கிரஸ் நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார். அதில் இளம் தலைமுறை வாக்காளர்களிடையே காங்கிரஸ் கட்சியை வளர்ப்பது குறித்து, தீவிர விவாதங்கள் நடைபெறும் எனத் தெரிகிறது.
முன்னதாக, ஜனவரி மாதம் 10ஆம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரானப் போராட்டத்தின்போது கைதாகி விடுதலையானவர்களைச் சந்திக்க, பிரியங்கா காந்தி வாரணாசி சென்ற நிலையில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘கெஜ்ரிவால் ஒரு மோசக்காரர்’ - டெல்லி காங்கிரஸ் மூத்தத் தலைவர் சஞ்சய் தீக்ஷித் தாக்கு