நடந்து முடிந்த 17ஆவது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. சமீபத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற மாநிலங்களில் கூட வெற்றிபெற முடியவில்லை. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அவரது சொந்தத் தொகுதியான அமேதியிலேயே பெரும் தோல்வியைச் சந்தித்தார்.
பிரியங்கா காந்தி தனது சகோதரர் போட்டியிட்ட அமேதியிலும், வயநாட்டிலும் தொடர்ந்து ராகுல் காந்திக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டார். ஆனால், காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்தது.
இந்நிலையில், பிரியங்கா காந்தி தனது தாயாரின் சொந்தத் தொகுதியான ரேபரேலியில் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் படு தோல்வியைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளையும், தலைவர்களையும் சந்தித்துப் பேசினார்.
இது குறித்து பிரியங்கா காந்தி, ‘நான் தோல்வி குறித்து பேச விரும்பவில்லை. தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததற்கு உண்மையான காரணம் கட்சி நிர்வாகிகளும், தலைவர்களும் சரிவர உழைக்கவில்லை. ரேபரேலியில் காங்கிரஸ் கட்சி வென்றதற்கு காரணம் சோனியா காந்தியும், ரேபரேலி மக்களும்தான். தேர்தலில் காங்கிரசின் வெற்றிக்காக உழைக்காத நிர்வாகிகளின் பெயரை என்னால் கூறமுடியும்’ என காட்டமாகக் கூறினார்.