இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதுமுள்ள பள்ளி, கல்லூரிகளுக்குக் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் டெல்லியிலுள்ள பள்ளிகள், பெற்றோர்களிடம் போக்குவரத்து கட்டணம் உட்பட பல்வேறு கட்டணங்களைச் செலுத்தக் கட்டாயப்படுத்துவதாகச் செய்திகள் வெளியாகின.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா, "பள்ளிக் கட்டணங்களை அதிகரிப்பது, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களைச் செலுத்துமாறு பெற்றோர்களை வலியுறுத்துவது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எங்களுக்கு வந்துள்ளன.
அரசின் உரிய அனுமதியின்றி பள்ளிகள் கட்டணங்களை உயர்த்தக்கூடாது. ஊரடங்கு காலத்தில் டியூசன் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். அதுவும் அடுத்த மூன்று மாதங்களுக்கு ஒரே முறையில் வசூலிக்கக் கூடாது. டியூசன் கட்டணத்தை மாதந்தோறும் வசூலிக்க வேண்டும். டியூசன் கட்டணத்தைத் தவிரப் போக்குவரத்து உள்ளிட்ட எந்த கட்டணங்களையும் பள்ளிகள் நிச்சயமாக வசூலிக்கக் கூடாது.
அதேபோல ஒப்பந்த ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் நிச்சயம் ஊதியம் வழங்க வேண்டும். ஊதியம் வழங்குவதில் ஏதேனும் நிதிச் சிக்கலை எதிர்கொண்டால், அதைத் தாய் நிறுவனத்திடம் தெரியப்படுத்தி உரிய நிதியைப் பெற வேண்டும்.
பள்ளிக் கட்டணம் செலுத்தாததை காரணமாகக் கூறி எந்த மாணவரையும் ஆன்லைன் வகுப்புகளுக்கு அனுமதிக்காமல் இருக்கக்கூடாது" என்றார்.
இதையும் படிங்க: 'மாநில அரசுகள் கூடுதல் கடன் பெறலாம்; விவசாயிகளுக்கு ரூ.50 ஆயிரம் கோடி' - ஆர்பிஐ ஆளுநர்