புதுச்சேரியில் கடந்த 150 நாட்களுக்கு மேலாக கரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் வழிகாட்டுதலின் பேரில் புதுச்சேரி அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை வழங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரியில் தனியார் பேருந்துகளை இயக்கி கொள்ளலாம் என புதுச்சேரி ஆட்சியர் அருண் கடந்த மூன்று நாட்களுக்கு முன் அனுமதி வழங்கினார்.
ஆனாலும் புதுச்சேரியில் உள்ள தனியார் பேருந்துகளை இயக்க அதன் உரிமையாளர்கள் தயாராக இல்லை. அதற்கு காரணம் பேருந்தில் ஒரு பக்க இருக்கையில் ஒரு பயணி மட்டுமே அமரவைத்தால் பெருத்த நஷ்டம் ஏற்படும் என்பதுதான். ஆகவே புதுச்சேரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் பேருந்துகளை இயக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.
இதனால் புதுச்சேரி புதிய, பழைய பேருந்து நிலையங்கள் தனியார் பேருந்துகள் ஏதுமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. அதேவேளையில் மறைமலை அடிகள் சாலையில் அரசு பேருந்துகள் மட்டுமே பயணிகள் வருகைக்காக நிறுத்தி வைக்கப்பட்டு மிகக்குறைந்த அளவில் அரசுப் பேருந்து சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.