N - 95 முகக் கவசங்களை நாடு முழுவதும் மலிவான விலையில் விற்பனை செய்யும் நோக்கில், மாஸ்க்குகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அதன் விலையை 47 விழுக்காடு வரை குறைத்துள்ளது. இம்மாதிரியான முகக்கவசங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாகத் தொடர்ந்து குற்றச்சாடுகள் எழுந்தன. முன்னதாக, இவ்வகை முகக் கவசங்கள் 150 ரூபாய் முதல் 300 ரூபாய்க்கு விற்கப்பட்டன. தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி தற்போது இந்த வகையான மாஸ்க்குகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
அரசு சாரா மருந்து நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் N - 95 முகக் கவசங்களின் விலை சமமாக இல்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், அவற்றின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள், தயாரிப்பாளர்கள், இறக்குமதி செய்பவர்கள் என அனைவருக்கும் விலை நிர்ணய ஆணையம் மே 21 ஆம் தேதி உத்தரவிட்டது.
பொது நலன் கருதி விலை குறைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. இது குறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில், "பற்றாக்குறையின்றி போதுமான எண்ணிக்கையில் N - 95 முகக்கவசங்கள் கிடைக்க அரசு உறுதி செய்துள்ளது. தயாரிப்பாளர்கள், இறக்குமதி செய்பவர்கள் ஆகியோரிடமிருந்து பெரும்பான்மையான முக்கவசங்களை அரசே நேரடியாகக் கொள்முதல் செய்கிறது. அத்தியாவசிய பொருள் பட்டியலில் N - 95 முகக்கவசத்தை அரசு சேர்த்துள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டிடிஆருக்கு பரவிய கரோனா!