குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர் ஆகியோர் பயணம் செய்ய புதிய ரக போயிங்-777 ஏர் இந்தியா விமானம் அன்மையில் வாங்கப்பட்டது.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலிருந்து 15 மணிநேரம் இடைவிடாத பயணம் மேற்கொண்ட இந்த விமானம், கடந்த அக்டோபர் 1ஆம் தேதி, டெல்லியில் தரையிறங்கியது.
ஏர் இந்தியா ஒன்-B777 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விமானத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முதல் பயணத்தை மேற்கொண்டார். தனது மனைவி சவிதா கோவிந்த் உடன் பயணம் மேற்கொள்ளும் குடியரசுத் தலைவர், முதல் பயணமாக ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்குச் செல்கிறார். அங்கு ஆந்திர பிரதேச ஆளுநர் ஹரிச்சந்த் ஆனந்த், அம்மாநில முதலமைச்சர் ஜகன்மோகன் ரெட்டி ஆகியோர் வரவேற்கவுள்ளனர்
தரிசனத்திற்குப் பின், குடியரசுத் தலைவரும் அவரது மனைவியும் திருப்பதி விமான நிலையத்திலிருந்து அகமதாபாத் புறப்படுகிறார்.
விமானத்தின் சிறப்பம்சங்கள்:
இந்தியா வந்தடைந்துள்ள இந்த விமானம், பிரதமரின் பயணத்திற்கு பயன்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது. முன்பிருந்த போயிங் ரக விமானம், முழு எரிபொருள் திறனுடன் 10 மணிநேரம் பயணம் செய்யவல்லது. ஆனால், இந்தப் புதிய ரக விமானம், இடைவிடாது 17 மணிநேரம் பயணம் செய்யும் திறன் கொண்டுள்ளது.
மேலும், பாதுகாப்புத் திறன் மேம்பாடுகளும் இந்தப் புதிய விமானத்தில் செய்யப்பட்டுள்ளன. ஏதேனும் ஏவுகணைகள் விமானத்தை தாக்கும்பட்சத்தில், அதனை முன்கூட்டியே அறிந்து, தடுத்து நிறுத்தும் திறனையும் இந்தப் புதிய ரக விமானம் கொண்டுள்ளது.
இதையும் படிங்க: நாட்டின் கரோனா நிலவரம்: பாதிப்பு 91.77 லட்சத்தை தொட்டது