உத்தரப் பிரதேச மாநிலம், காஸியாபாத்தில் உள்ள கோடா பகுதியில் வசித்துவந்த கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அந்தப் பெண் சிகிச்சைக்காக நொய்டாவுக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், கரோனாவைக் காரணம் காட்டி அரசு மருத்துவமனைகள் உள்பட அனைத்து மருத்துவனைகளும் அவரை அனுமதிக்க மறுத்துவிட்டன.
இதனால், அந்தப் பெண் பிரசவ வலியில் துடித்து ஆம்புலன்ஸிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள சூழலில், இதுதொடர்பாக விசாரணை நடத்துமாறு கவுத்தம புத் நகர் மாவட்ட ஆட்சியர் சுஹாஸ், கூடுதல் ஆட்சியர் முனிந்தரா நாத் உபத்யாயிக்கு உத்தரவிட்டுள்ளார்.
இவ்விவகாரம் குறித்து அம்மாவட்ட தலைமை மருத்துவ அலுவலர் கூறுகையில், "சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இதற்குக் காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சம்பவங்களை மீண்டும் நடக்க விடமாட்டோம்" என்றார்.
இதையும் படிங்க : பிரியங்கா காந்தியைக் கிண்டல் செய்த உ.பி. துணை முதலமைச்சர்!