ஒடிசா மாநிலம் கலஹண்டி (Kalahandi) மாவட்டத்திற்குட்பட்ட நகுபடா கிராமத்தில் கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உறவினர்கள் முயன்றனர். ஆனால், அழைத்துச் செல்வதற்கு சரியான சாலை இல்லாததால் உறவினர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
பின்னர் வேறு வழியின்றி கட்டிலில் கர்ப்பிணியை படுக்க வைத்து, ஆற்றைக் கடந்து மறு பக்கத்திற்கு அழைத்து சென்றனர். ஆற்றை கடப்பதற்கு வேறு சாலை ஏதும் இல்லாததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாக பல முறை அரசிடம் முறையிட்டும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மிகுந்த வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பான செய்தி, ஊடகங்களில் வெளியாகியதையடுத்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த கிராம மக்களுக்கான நீதி கிடைக்க வேண்டும் எனவும் சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.