அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, தனது வாழ்வில் நடைபெற்ற முக்கிய நினைவுகளைத் தொகுத்து 'எ பிராமிஸ்டு லேண்ட்' என்ற புத்தகத்தை சமீபத்தில் வெளியிட்டார்.
நவம்பர் 17ஆம் தேதி இப்புத்தகம் விற்பனைக்கு வந்த நிலையில், புத்தகத்தின் சில பத்திகள் ஊடகங்களில் முன்கூட்டியே வெளியிடப்பட்டன. அதில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குறித்த ஒபாமாவின் கருத்து இணையத்தில் வைரலானது.
ராகுல் காந்தி குறித்து ஒபாமா குறிப்பிடுகையில், "பதற்றத்தோடு இருப்பவர். நன்றாகப் படித்து ஆசிரியரைக் கவர வேண்டும் என நினைக்கும் மாணவர்போல் இருந்தாலும், குறிப்பிட்ட ஒரு விவகாரத்தில் ஆழ்ந்த அறிவைப் பெற விருப்பமோ, தகுதியோ பெறாமல் அவர் இருக்கிறார்" என்று கூறியுள்ளார்.
மேலும் சோனியா காந்தி, மன்மோகன் சிங்கைதான் பிரதமராகத் தேர்ந்தெடுப்பார் என்று ஒன்றுக்கு மேற்பட்ட அரசியல் பார்வையாளர்கள் நம்பியதாகவும், தேசிய அளவில் அரசியல் பின்புலம் இல்லாத ஒரு வயதான சீக்கியரான மன்மோகன் சிங், தனது 40 வயது மகன் ராகுலுக்கு எந்த அச்சுறுத்தலும் விளைவிக்க மாட்டார் என சோனியா நம்பியதாகவும் அந்தப் புத்தகத்தில் ஒபாமா தெரிவித்துள்ளார்.
ஒபாமாவின் இந்தக் கருத்துகளுக்கு அதிகாரப்பூர்வமாக பதிலளிக்க காங்கிரஸ் முன்னதாக மறுப்பு தெரிவித்தது. இருப்பினும், காங்கிரஸ் கட்சியின் பல்வேறு தலைவர்களும் ராகுல் காந்தி, மன்மோகன் சிங் குறித்த ஒபாமாவின் இந்தக் கருத்துகளுக்கு தொடர்ந்து தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பராக் ஒபாமாவின் இந்தக் கருத்து ஒரு ஜனநாயக, இறையாண்மைமிக்க நாட்டின் உள்நாட்டு அரசியலில் தலையிடுவதாக உள்ளதாகக் கூறி, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கியான் பிரகாஷ் சுக்லா என்பவர் அம்மாநில சிவில் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.
பராக் ஒபாமாவின் இந்தக் கருத்தால் ராகுல் காந்தி, மன்மோகன் சிங் ஆகியோரின் லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் கடும் கோபத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தப் புகார் குறித்து உரிமையியல் நீதிமன்ற நீதிபதி விநீத் யாதவ் வரும் டிசம்பர் 1ஆம் தேதி விசாரிக்க உள்ளார்.
இதையும் படிங்க : ஏழு ஆண்டுகளுக்கு முன்பே கரோனாவைக் கண்டுபிடித்த வியாபாரி!