கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் இதுவரை மூன்று கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் மே 29வரை ஊரடங்கு இருக்கும் நிலையில், நாடு முழுக்க கடுமையான பொருளாதாரச் சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, சுமார் ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்புத் தொகுப்பு திட்டத்தை அறிவித்தார். இந்தத் தொகுப்பு குறித்த விவரங்களை கடந்த 13ஆம் தேதியன்று செய்தியாளர்களைச் சந்தித்து வெளியிட்டிருந்தார். அதில், மின்சாரத்துறை தொடர்பில் 90,000 கோடி ரூபாய் நிதி தொகுப்பு அளிக்கப்படும் என குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து, மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ராஜ்குமார் சிங் அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இது தொடர்பாக ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “சுயசார்பு இந்தியா (ஆதம் நிர்பவ் பாரத்) ஒரு பகுதியாக பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (பி.எஃப்.சி) மற்றும் கிராமிய மின்மயமாக்கல் கார்ப்பரேஷன் (ஆர்.இ.சி) மூலம் ரூபாய் 90,000 கோடி நிதி தொகுப்பை அளிக்க மத்திய அரசாங்கம் மே 13ஆம் தேதி அன்று முடிவு செய்தது.
இந்த அறிவிப்பின் கீழ், மின் விநியோக நிறுவனங்களுக்கு கிராமிய மின்மயமாக்கல் கார்ப்பரேஷன் மற்றும் பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் ஆகியவற்றின் மூலமாக நீண்ட கால, இடைக்கால சிறப்புக் கடன்களை வழங்கி, அதனை செலுத்து வரம்பை 10 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 ஊரடங்கு மின் துறையின் நிதி நிலைமைகளை மோசமாக பாதித்துள்ளது. இதன் விளைவாக மின் துறைச் சங்கிலி முழுவதும் கடும் பணப்புழக்க நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த சூழ்நிலையில், பணப்புழக்க சிக்கலைத் தடுக்க ஜென்கோஸ் மற்றும் டிரான்ஸ்மிஷன் நிறுவனங்களுக்கு மின் விநியோக நிறுவனங்கள் (டிஸ்காம்) செலுத்த வேண்டிய பெரும்பாலான இந்த சிறப்பு நிதி அறிவிப்பு உதவும். இது மின் துறையில் மீண்டும் பணப்புழக்கத்தை உருவாக்கும்.
மின்சார விநியோகத்தை பராமரிக்கும் மின் விநியோக நிறுவனங்களின் சுமையைக் கணிசமாகக் குறைக்க இந்த தொகுப்பு அளிக்கபடும் இந்த நிதி இரண்டு தவணைகளில் தலா ரூபாய் 45,000 கோடி என்ற வகையில் அளிக்கப்படும்.
நிதி அழுத்தத்திலிருந்து டிஸ்காம்களை காக்க, மத்திய ஜென்கோஸ் திட்டமிடப்படாத மின்சாரம் குறித்த நிலையான கட்டணத்தை ஊரடங்கு காலத்திற்கு பின் வட்டி இல்லாமல் மூன்று தவணையில் திருப்பிச் செலுத்தவும் உத்தரவிடுகிறது.
மின் கொள்முதல் ஒப்பந்தத்தின்படி, மின்சாரம் விநியோகிக்கப்பட்டவில்லை என்றாலும் ஒப்பந்த அளவிற்கு ஏற்ற நிலையான தொகையை ஜென்கோஸுக்கு, மின் விநியோக நிறுவனங்கள் (டிஸ்காம்) செலுத்த வேண்டும். இதனால் ஊரடங்கு காலத்தில் பயன்படுத்தப்படாத மின் ஆற்றலுக்கும் சேர்த்தே மின் விநியோக நிறுவனங்கள் (டிஸ்காம்) பணம் செலுத்த வேண்டியிருப்பதால், இது அந்நிறுவனங்களுக்கு கடும் பொருளாதார சுமையை ஏற்படுத்தியுள்ளது.
ஊரடங்கு காலத்தில் பி.ஜி.சி.ஐ.எல்லுக்கு செலுத்த வேண்டிய பரிமாற்றக் கட்டணங்களை (ஐ.எஸ்.டி.எஸ்) 20- 25 சதவீத வரை தள்ளுபடி செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : கடைசி பொருளாதார ஊக்க அறிவிப்புகள்; சாதாரண மக்களுக்கு கை கொடுக்குமா?