புதுச்சேரி மாநிலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ளது தாவரவியல் பூங்கா. இது புதுவையின் மிக முக்கியமான இடமாக அங்கம் வகிக்கிறது. டச்சுக்காரர்கள் ஆட்சிக் காலத்திலிருந்த ஜார்ஜ் பரோதி என்பவர் தனக்குச் சொந்தமான இந்தப் பூங்காவை புதுச்சேரி அரசுக்கு எழுதிக் கொடுத்தார். தற்போது அரசுடமையாக்கப்பட்ட இந்தப் பூங்காவில் பல அரியவகை ஆயிரம் காலத்து தாவரங்களும் மரங்களும் உள்ளன.
அதுமட்டுமன்றி சிறுவர் ரயில், இசை நீரூற்று, பார்வையாளர் மேடை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் இருப்பதாலும் பூங்கா முழுவதும் நிழல் மிகுந்து காணப்படுகிறது. இதனால், புதுச்சேரி மக்கள் குடும்பத்தோடு இங்கு வந்து பொழுதை கழித்துச் செல்கின்றனர்.
அதேபோன்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த தாவரவியல் பூங்காவை காணாமல் செல்வதில்லை. இந்நிலையில், கடந்த ஓராண்டாக பூங்காவில் இயங்கிவந்த சிறுவருக்கான ரயில் பழுதடைந்துள்ளதால் பொதுமக்கள் பயன்பாட்டில் இல்லாமல் குடோனில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
நிதி தட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கும் தாவரவியல் பூங்கா சரியான பராமரிப்பின்றி தற்போது பொலிவிழந்து காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது.
இது குறித்து புதுச்சேரி சுற்றுலாப் பயணி பாரதி என்பவர் கூறுகையில், இப்பூங்காவில் இயங்கிவந்த ரயில் பழுதுபார்த்து அரசு மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனோடு பூங்காவை பராமரிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.