பிகார் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பெட்டியா பகுதியை கோபால்கஞ்ச் நகரத்துடன் இணைக்கும் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதன் காரணமாக வடக்கு பிகாரின் பல மாவட்டங்களுக்கிடையேயான இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பாலம் மேலும் பிளவுபடுவதைத் தடுக்கும் பொருட்டு கிராம நிர்வாகிகள் நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர்.
கோபால்கஞ்ச் மாவட்டத்தின் கந்தக் ஆற்றின் குறுக்கே கட்டுப்பட்ட சத்தர்காட் பாலத்தை ஜூன் 16ஆம் தேதி பிகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் திறந்துவைத்தார். பாலம் திறந்து ஒரு மாதம் கூட முடியவடையாத நிலையில், சத்தர்காட் பாலம் வெள்ளத்தில் இடிந்து விழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக, ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் பிகார் காங்கிரஸ் தலைவர் மதன் மோகன் ஜா ஆகியோர் முதலமைச்சரை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள ராஷ்டிரிய ஜனதா தள தலைவர், "ரூ .263.47 கோடி செலவில் 8 ஆண்டுகளாக கட்டப்பட்ட கோபால்கஞ்சின் சத்தர்காட் பாலம், வெறும் 29 நாட்களில் இடிந்து விழுந்தது. ஜாக்கிரதை! நிதீஷ் ஊழல் செய்தார் என்று யாரும் சொல்ல முடியாது. ரூ. 263 கோடி என்பது ஒரு பொருட்டல்ல. அவர்களின் எலிகள் கூட இந்த அளவுக்கு மதிப்புள்ள மதுவை உட்கொள்கின்றன" என்று விமர்சித்துள்ளார்.