குஜராத் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாகவே கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில், இன்று காலை ஐந்து மணியளவில் சூரத் நகரிலுள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் சாலைப் பகுதியில் நீட்டிக்கொண்டிருந்த பால்கனி திடீரென்று இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
சாலையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த மூன்று தொழிலாளர்கள் மீது இந்தக் கட்டடம் விழுந்தது. இதில் பலந்த காயமடைந்த அவர்கள், அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இருப்பினும், சிகிச்சைப் பலனின்றி மூவரும் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து சூரத் மாநகராட்சி ஆணையர் பஞ்சனிதி பானி கூறுகையில், "இந்த நிலஞ்சன் அடுக்குமாடிக் கட்டடத்தில் 49 பிளாட்டுகள், 23 கடைகள் உள்ளன. இந்த ஆண்டு தொடக்கத்திலேயே கட்டடம் மோசமான நிலையில் இருந்ததால் அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இது குறித்து அதன் உரிமையாளருக்கும் பல நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன. இது தனியார் சொத்து என்பதால், பாதுகாப்பற்ற முறையில் இருக்கும் இந்தக் கட்டடத்தை இடிக்கும்படி நாங்கள் அதன் உரிமையாளருக்கு அறிவுறுத்தியிருந்தோம். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யத் தவறிவிட்டனர், இதனால் இந்த விபத்து ஏற்பட்டது" என்றார்.
மேலும், கட்டடத்தின் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். உயிரிழந்த மூவரும் அனில் நேபாளி, ஜெகதீஷ் சவுகான், ராஜு மர்வாடி என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் மூன்று பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ள நிலையில், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
இதையும் படிங்க: மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவரின் உடல் 20 மணி நேரத்திற்கு பின் மீட்பு!