புதுச்சேரி: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பரப்புரை மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் நடைபெற்றது.
இதில் முதலமைச்சர் நாராயணசாமி, ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் வீரப்பமொய்லி, பள்ளம் ராஜு மற்றும் புதுச்சேரி மாநிலப் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், சஞ்சய் தத், மாநில காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, 'நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் காங்கிரஸ் கூட்டணியில் பலமான வேட்பாளர்கள் உள்ளனர் எனவும் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக கட்சிகளில் வேட்பாளர்களை தேடிக்கொண்டிருப்பதாகத் தெரிவித்த அவர், தற்போது புதுச்சேரியில் ஆள்பிடிக்கும் வேலையில் பாஜக இறங்கியுள்ளதாகவும், எவ்வளவு ஆட்களைப் பிடித்தாலும், பணம் செலவு செய்தாலும், புதுச்சேரியில் பாஜக மண்ணைக் கவ்வும்' என்றார்.
தொடர்ந்து பேசுகையில், ராகுல் காந்தி புதுச்சேரிக்கு விரைவில் வருவதாகத் தெரிவித்த அவர், 'அனைவரும் ஒற்றுமையாக இருந்து மீண்டும் புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும்' எனக் கேட்டுக்கொண்டார்.