புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசு ஆட்சி செய்துவருகிறது. இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் வைத்திலிங்கம் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். எனவே அவர் ஜுன் 6ஆம் தேதி டெல்லியில் எம்.பி-யாக பதவி ஏற்க இருக்கிறார். மக்களவைத் தேர்தல் வெற்றி சான்றிதழ் பெற்ற 24ஆம் தேதியில் இருந்து 14 நாட்களில் அவர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது. இதனால் புதிய சபாநாயகர் தேர்தலை விரைந்து நடத்த அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டப்பேரவை செயலர் வின்சென்ட் ராயர், ’ஜுன் 3 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையை கூட்ட துணைநிலை ஆளுநர் அனுமதி அளித்துள்ளார். அன்றைய தினமே சபாநாயகர் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
சபாநாயகர் பதவிக்கு பெயரை பரிந்துரை செய்பவர்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் 12 மணிக்குள் சட்டப்பேரவை செயலர் அலுவலகத்தில் மனுக்களை அளிக்க வேண்டும் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் பதவிக்கு தற்போதைய பொறுப்பு சபாநாயகர் சிவகொழுந்து, அரசு கொறடா அனந்தராமன், முதலமைச்சரின் நாடாளுமன்ற செயலர் லட்சுமிநாராயணன் ஆகியோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
எதிரணியில் என்.ஆர்.காங் உறுப்பினர்கள்-7, அதிமுக-4, பாஜக நியமன எம்எல்ஏ-3 என 14 பேர் உள்ளனர். இவர்களில் யாரும் விருப்ப மனு தாக்கல் செய்யாதபட்சத்தில் காங். வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு மூன்றாம் தேதி காலை பதவி ஏற்பார் என தெரிவித்தார்.
இத்தேர்தலில் எம்பியாக தேர்வாகியுள்ள வைத்திலிங்கமும் வாக்களிக்க முடியும் என்பதால் காங்கிரஸ் தரப்பு வேட்பாளரின் வெற்றி உறுதியாகி உள்ளது. ஏனெனில் காங்-15 எம்எல்ஏ, திமுக-3, சுயேட்சை-1 என 19 ஓட்டுக்கள் ஆளும் தரப்பு வசம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.