புதுச்சேரியில் பிரெஞ்சுக்காரர்கள் வடிவமைத்த நேரான வீதிகள், பாரம்பரிய கட்டடங்கள், கடற்கரை போன்றவற்றை ரசிக்க வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை புரிகின்றனர். சுற்றுலா மூலம் புதுச்சேரிக்கு அதிக வருவாய் கிடைப்பதால், அதை மேம்படுத்த மத்திய அரசு நிதியிலிருந்து செயற்கை மணல் திட்டை உருவாக்கியது புதுச்சேரி அரசு. கடந்த காலங்களில் பரந்து விரிந்து காணப்பட்ட இயற்கை மணல் பரப்பு, நாளடைவில் கடல் அரிப்பால் மறைந்து தற்போது வெறும் கருங்கற்கள் மட்டுமே காட்சி அளிக்கின்றன.
இவ்வாறு கற்களால் ஆன கடற்கரையை காண சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்கு வருவதால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் கொண்டிருந்த வேளையில், கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் புதுச்சேரியின் சுற்றுலா பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனிடையே கடற்கரை சாலை, பாரதி பூங்கா, சுண்ணாம்பாறு படகு குழாம் உள்ளிட்டவை மூடப்பட்டன.
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பி மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், அவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களின் குடும்பங்கள் மற்றும் தள்ளுவண்டி, பெட்டிக்கடை, நடமாடும் விற்பனையகம் நடத்தி வந்த சிறு வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதற்கிடையில், சில தளர்வுகள் அளிக்கப்பட்டு நகர பகுதியில் வர்த்தக நிறுவனங்கள் மீண்டும் திறக்க அரசு அனுமதி அளித்த நிலையில், கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்கள் திறக்கப்படாததால் வியாபாரிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் நடைபயிற்சி, சிறு வியாபாரிகள் விற்பனைக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் அரசு அனுமதி அளித்தும் கூட, சுற்றுலாப் பயணிகளின் வருகை சொற்ப அளவிலேயே உள்ளது. புதுச்சேரியில் மீண்டும் விமான போக்குவரத்து தொடங்காததால், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை பூஜ்ஜியமாக உள்ளது. இதனால் தங்கும் விடுதி, ஹோட்டல் உரிமையாளர்கள், வியாபாரிகள் புத்தாண்டு சீசன் வியாபாரத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகையை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும், வைரஸ் தொற்று கட்டுப்பாட்டில் இருந்தால் வர்த்தகம் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் எனவும் கூறும் புதுச்சேரி தங்கும் விடுதி அசோஷியேஷன் தலைவர் ஜனார்த்தனன், தங்கும் விடுதிகளில் தற்போது கணிசமான அளவு சுற்றுலாப் பயணிகள் முன்பதிவு செய்திருப்பதாகவும், விமானம், ரயில் சேவை தொடங்கினால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்றார்.
கரோனா பரவலுக்கு முன் வியாபாரம் செழிப்பாக இருந்தது என்றும், தற்போது கடைகள் திறக்க அரசு அனுமதி அளித்தும் வியாபாரம் நடைபெறவில்லை என்று வேதனை தெரிவிக்கும் கடற்கரை வியாபாரி சங்க தலைவர் அருண், சுற்றுலாப் பயணிகள் வருகை தொடங்கியுள்ள நிலையில், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாட்களுக்காக காத்திருப்பதாக கூறுகிறார்.
கரோனா பரவலால் உலக வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிலிருந்து மீள்வதற்கான சாத்தியகூறுகளை எதிர்நோக்கி காத்திருக்கும் வங்கக் கரையோர வியாபாரிகளின் நம்பிக்கை மெய்க்கட்டும்.