சுற்றுலா நகரமான புதுச்சேரியில் ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, வட மாநிலங்கள் உள்ளிட்ட அண்டை மாநில சுற்றுலா பயணிகள் அங்க்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளின் வருகையால் பெரும்பாலான ஹோட்டல்கள் நிரம்பி உள்ளன. புத்தாண்டை வரவேற்கும் விதமாக கலை நிகழ்ச்சிகள், வாண வேடிக்கை, மது விருந்து உள்ளிட்ட பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகள் புதுச்சேரி அரசின் சுற்றுலாத் துறையும் தனியார் ஓட்டல் நிர்வாகமும் ஏற்பாடு செய்துவருகின்றன.
இந்த ஆண்டு நட்சத்திர ஓட்டல்கள் தங்கும் விடுதிகளில் தற்போது 90 சதவீத அறைகள் முன்பதிவு ஆகியுள்ளன. இதற்கிடையே புதுச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் மக்களும் எவ்வித சிரமமுமின்றி கடற்கரை சாலையில் புத்தாண்டை கொண்டாடுவதற்கு இன்று மாலை 6 மணி முதல் போக்குவரத்து முற்றிலும் கடற்கரை சாலை மற்றும் செஞ்சி சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்காக புதுச்சேரி போக்குவரத்து காவல் துறை சார்பில் போக்குவரத்து மாற்றங்கள் குறித்த வரைபடத்தை வெளியிட்டுள்ளனர், அதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள பகுதிகள், பார்க்கிங் பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: விமான நிலையங்களில் ஒரு நபருக்கு 4 லிட்டர் வரை மது! - இந்திய அரசுக்கு பரிந்துரை