தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் பல்வேறு வித்தியாசமான முயற்சிகளை அரசு பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரியில் கடந்த 10ஆம் தேதி கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் தொடங்கியபோது பல்வேறு தொடக்கப்பள்ளிகளின் ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில் பள்ளிகளில் தோரணம் கட்டி, மேள தாளங்களுடன் நாதஸ்வரம் முழங்க மாணவர்களை வரவேற்று இன்ப அதிர்ச்சி அளித்தனர்.
அந்த வகையில், புதுச்சேரி நோனாங்குப்பத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியின் ஆசிரியை சுபாஷினி, புது முயற்சியை மேற்கொண்டுள்ளார். வகுப்பறைக்குள் நுழையும் மாணவர்கள், சுவற்றில் ஒட்டப்பட்ட புகைப்படத்தை தொட்டவுடன் அதில் குறிப்பிட்டுள்ள செயல்களை குழந்தைகளுடன் சேர்ந்து சுபாஷினி நிறைவேற்றுகிறார்.
பிள்ளைகளுக்கு எது விருப்பமோ அதை சளைக்காமல் செய்துவிட்டுதான் பாடத்தையே ஆரம்பிக்கிறார் இந்த சுபாஷினி டீச்சர். அதனால்தான் இது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.