‘கறுப்பர் கூட்டம்’ என்ற, ‘யூ டியூப் சேனலில் ஆபாச புராணம் என்ற பெயரில், கந்தசஷ்டி கவசத்தை கேவலமாக சித்தரித்ததாக புகார் எழுந்தது. இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில், வீடியோ வெளியிட்டுள்ளதாக அதன் உரிமையாளர் செந்தில்வாசன் கைது செய்யப்பட்டார்.
இதன் தொகுப்பாளரான நாத்திகன் என்கிற சுரேந்திரன் நடராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்பிணை கோரியிருந்தார். ஆனால் அவர், ஒரு சில நாள்களுக்கு முன்பாக, புதுச்சேரி அரியாங்குப்பம் கோட்டைமேடு பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில், தமிழ்நாடு காவல் துறையினரிடம் சரணடைந்தார்.
காஞ்சிபுரத்திலிருந்து தமிழ்நாடு காவல் துறையினர் புதுச்சேரி அரியாங்குப்பம் வந்து அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். இந்நிலையில், கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது புதுச்சேரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதாவது உரிய இ-பாஸ் இல்லாமல் அவர், புதுச்சேரி மாநில எல்லைக்குள் நுழைந்ததாக புகார் எழுந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.