புதுச்சேரி மாநிலத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. மற்ற மாநிலங்களை காட்டிலும் புதுவையில் இந்த நோய் தொற்று அதிகரித்திருப்பது, பொதுமக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், புதுவை மாநில அரசின் நல்வழித்துறை சார்பில் கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த யூ-ட்யூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளது.
இந்த புதிய யூ-ட்யூப் சேனலை, மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தொடங்கி வைத்தார். புதுச்சேரி மாநில சட்டப்பேரவையில் உள்ள சுகாதாரத் துறை அமைச்சர் அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்வில் வளர்ச்சி ஆணையார் அன்பரசு, புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண், துறை இயக்குனர் மோகன்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த யூ-ட்யூப் சேனலில் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் அனுபவங்களை மக்களுக்கு தெரியப்படுத்தவுள்ளனர். மேலும், கரோனா பாதிப்பை பற்றி தெரியாமல் அலட்சியம் காட்டும் சிலருக்கு இது பயனுள்ளதாக அமையும் என் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் சார்ந்த மருத்துவ வல்லுனர்களின் அறிவுரை மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்கும் விதமாகவும், இந்த புதிய முயற்சியினை மாநில சுகாதராத்துறை எடுத்துள்ளது.
அதனோடு, உள்ளுர் கேபிள் தொலைக்காட்சிகளிலும் கரோனா தொடர்பாக மக்களுக்கு பயன்தரக்கூடிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப மாநில நலவழித் துறை ஏற்பாடுகள் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஏ.ஆர். ரஹ்மானுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!