புதுச்சேரி, காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் - திமுக கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நேற்று (செப்.22) மாலை நடைபெற்றது. இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது, “மத்திய அரசின் மூன்று வேளாண் திருத்த சட்ட மசோதாக்களான கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடக்கிறது.
இவை விவசாயிகளின் சந்தைகளையும் மண்டிகளையும் ஒழிக்கும் சட்டங்கள். மாநில அரசுகள் விவசாயிகளுக்குத் தரும் மானியங்கள் இவற்றின் மூலம் தடுத்து நிறுத்தப்படும். புதுச்சேரியில் உள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகள் இணைந்து வரும் 28ஆம் தேதி புதுச்சேரி, உழவர்கரை, பாகூர், காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளன” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “மத்திய அரசின் விவசாய விரோதச் சட்டங்களை ஆதரிக்கும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு விவசாயிகளின் கஷ்டம் தெரியவில்லை. கார்ப்பரேட் முதலாளிகளின் கள்ளச் சந்தையை தமிழ்நாடு முதலமைச்சர் ஆதரிக்கிறாரா? பதில் சொல்லட்டும்” என்றார்.
இதையும் படிங்க: சசிகலா குறித்த கேள்வி: எடப்பாடி சொன்னது இதுதான்...!