புதுச்சேரி: மாணவர்கள், சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பை மீறி நடத்தப்படும் நீட் தேர்வை எதிர்த்து பொதுமக்கள் குரல் கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள்விடுத்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நாராயணசாமி, “புதுச்சேரியில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசு முனைப்புடன் செயல்பட்டுவருகிறது. பரிசோதனையின் எண்ணிக்கை தினமும் 5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
காய்ச்சல் அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவரும் நோயாளிகளின் விவரங்களை அரசுக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும், இல்லையெனில் அதன் உரிமம் ரத்துசெய்யப்படும். மேலும், அரசின் விதிமுறைகளைக் கடைப்பிடிக்காத வணிக நிறுவனங்கள் சீல்வைக்கப்படும்" என எச்சரித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “மாணவர்கள், சமூக அமைப்புகளின் கடும் எதிர்ப்பை மீறி நீட் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த நீட் தேர்வு வேண்டாம் எனக் கூறும் மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இதன்மூலம் ஏற்பட்ட மாணவர்களின் உயிரிழப்புக்கு பாஜக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.
மேலும், இந்த நீட் தேர்வை எதிர்த்து தமிழ்நாடு, புதுச்சேரி மக்கள் மத்திய அரசுக்கு எதிராக கொதித்தெழ வேண்டும். இது மக்கள் பிரச்னை, பாஜகவிற்கு தகுந்த பாடத்தை கற்றுக்கொடுக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: 'நீட்தேர்வில் தாலியை கழட்டி கொடுத்த மாணவியே கவலைப்படவில்லை' - கருப்பு முருகானந்தம்