தேசிய ஆசிரியர் சங்கத்தின் புதுச்சேரி கிளை சார்பில் புதிய கல்விக் கொள்கை தொடர்பான கருத்தரங்கம் இன்று புதுவைத் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு பாஜக மூத்தத் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான இல. கணேசன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;
'பாஜகவில் அமைப்புக்கு என்று ஒரு பிரிவு, அரசியலுக்கு என்று ஒரு பிரிவு உள்ளது. நான் அமைப்பில் இருந்து வந்தவன். பிறகு கட்சியைச் சேர்ந்தவர்கள் என்னை தேர்தலில் நிற்க பணித்தார்கள். தீனதயாள் உபாத்தியாயா எங்களது அகில பாரத தலைவராக இருந்து அமைப்பை பலப்படுத்துவதில் கவனம் செலுத்தினார். ஆட்சிக்கு வருவதற்கு வாஜ்பாய் போன்றவர்கள் கவனம் செலுத்தினார்கள். இந்தத் திட்டத்தின் படி தான், பாஜக செயல்பட்டு வருகிறது. இது போன்ற ஒரு திட்டம் ரஜினி மனதில் இருந்திருக்கலாம். அதனை அவர் வெளிப்படுத்தியுள்ளார். எதுவாக இருந்தாலும் அவர் கட்சி தொடங்கிய பிறகுதான், அது எப்படி செயல்படுகிறது என்பதைப் பார்க்க முடியும்.
இதுபோல ஒரு திட்டம் இருக்குமானால், அது நல்லதும் கூட. அமைப்பு ரீதியான பணி செய்பவர்கள் சமுதாயத்தில் பெரிதாக விளம்பரம் விரும்பமாட்டார்கள். பிரபலமாக மாட்டார்கள். ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்புபவர்கள் தான் பிரபலம் ஆவார்கள். ஆனால், இங்கு ரஜினிதான் எல்லாமே அதிகமாக பிரபலமாகி இருக்கிறார். இருப்பினும் நல்ல எண்ணத்தில் ஏதோ சொல்லி இருக்கிறார். வெற்றியாகும் என்ற வாய்ப்பில் ரஜினி கூறியிருக்கிறார். அது எப்படி அமலாகி, எப்படி போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். முதலில் கட்சியைத் தொடங்கட்டும். அதன் பிறகு இவை எல்லாம் மக்களுக்கு புரிய வரும்’ என்றார்.
தமிழ்நாடு பாஜக தலைவராக முருகன் திறமையானவர். அவர் மீது எவ்விதமான குறையும் இல்லை. அனுபவம் வாய்ந்தவர். அவர் நியமிக்கப்பட்டதில் அனைவரும் திருப்தியாக உள்ளனர்.
இதுகுறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஏனென்றால் 'நான் இந்த ரேஸில் இல்லை'. மேலும் பாஜகவில் இருப்பவர்கள் சந்நியாசிகள் அல்ல. ஒருவன் ஒரு பதவிக்கு வரவேண்டும் என்ற ஆசை இருக்குமானால், அந்த ஆசை பாஜகவில் இருப்பவர்களுக்கும் உண்டு.
ஆனால் மற்ற கட்சிக்கும் பாஜகவுக்கும் இருக்கும் வேறுபாடு என்னவென்றால், ஒருவன் ஒரு பதவிக்கு முயற்சி செய்யலாம். ஆனால் முடிவு என்று தலைவர் அறிவித்துவிட்டால், யார் பதவிக்கு விரும்பினாரோ, அவர்தான் முதலில் சென்று தலைவராக அறிவித்த நபருக்கு மாலை போடுவார், இதுதான் பாஜகவின் விசேஷ தன்மை' என்றார்.
இதையும் படிங்க: 'அவர் பேசியிருக்கலாம், இனி பயனில்லை' - ஜோதிராதித்ய சிந்தியா குறித்து காங்கிரஸ்