கரோனா சூழல் குறித்து எட்டு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று (நவ.24) ஆலோசனை நடத்தினார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், நிதி ஆயோக் வி.கே. பால் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய கெஜ்ரிவால், "தேசியத் தலைநகரில் பல்வேறு காரணங்களால் கரோனா மூன்றாம் அலையின் தாக்கம் அதிகரித்தது. அதில் மிக முக்கியக் காரணம் காற்று மாசுபாடு. அண்டை மாநிலங்களில் விவசாயக் கழிவுகளை எரிப்பதால் மாசுபாடு அதிகரிக்கிறது. இதில், பிரதமர் தலையிட வேண்டும். பெருந்தொற்றின் மூன்றாம் அலையில் நவம்பர் 10ஆம் தேதி மட்டும் புதிதாக 8,600 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. இது தொடரும் என்ற நம்பிக்கையில் உள்ளேன்.
மூன்றாம் அலை தொடரும் வரை, மத்திய அரசின் கீழ் உள்ள மருத்துவமனைகளில் கூடுதலாக 1,000 ஐசியு படுக்கைகளை ஏற்பாடு செய்ய வேண்டும்" என்றார். கடந்த 24 மணி நேரத்தில், டெல்லயில் புதிதாக 4,454 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெருந்தொற்று காரணமாக 121 பேர் உயிரிழந்ததன் மூலம் மொத்த எண்ணிக்கை 8,512ஆக உயர்ந்துள்ளது.