மனிதர்களின் ஆரோக்கியத்தை கெடுப்பதில் சுற்றுச்சூழல் மாசுக்கு உள்ள பங்கு குறித்து சர்வதேச அளவில் 40 நாடுகளில் 400 அமைப்புகள் நடத்திய ஆய்வில், கடந்த 2017ஆம் ஆண்டில் மட்டும் 15 விழுக்காடு உயிரிழப்புகள் சுற்றுச்சூழல் மாசு காரணமாக ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக உயிர்கள் மடிவதில் இந்தியாவும் சீனாவும்தான் முன்னிலை வகிப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
திடீர் உயிரிழப்புகள் குறித்த சர்வதேச ஆவணங்களின்படி, கடந்த 2017ஆம் ஆண்டு நிகழ்ந்த 83 லட்சம் மரணங்களில் 23 லட்சம் மரணங்கள் இந்தியாவில் நிகழ்ந்துள்ளன. 18 லட்சம் பேர் சீனாவில் உயிரிழந்துள்ளனர். இவ்விரு நாடுகளுக்கு அடுத்ததாக நைஜீரியாவில் 2.79 லட்சம் பேரும், இந்தோனேஷியாவில் 2.32 லட்சம் பேரும், பாகிஸ்தானில் 2.23 லட்சம் பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த ஆவணங்களின்படி அமெரிக்காவில் 2 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிர் இழப்புகளை ஏற்படுத்துவதில் சுற்றுச்சூழல் மாசுபாட்டின் பங்கு எந்த அளவிற்கு தீவிரமாக இருக்கிறது என்பதை இந்தப் புள்ளி விவரங்கள் நமக்கு உணர்த்துகின்றன. சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக உலகில் நிகழும் உயிரிழப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு உயிரிழப்புகள் இந்தியா, சீனா, நைஜீரியா, இந்தோனேஷியா, பாகிஸ்தான், அமெரிக்கா, பங்களாதேஷ், ரஷ்யா, எத்தியோபியா, பிரேசில் ஆகிய 10 நாடுகளில்தான் நடப்பதாக GAHP-இன் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இதில் சீனாவில் சராசரியாக ஆண்டுக்கு 12.42 லட்சம் மரணங்களும், இந்தியாவில் 12.40 லட்சம் மரணங்களும் நிகழ்வதாக அந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆபத்தை உணர்ந்து தொழில்நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட கடும் நடவடிக்கைகள் காரணமாக சீனாவில் கடந்த 10 ஆண்டுகளில் சுற்றுச்சூழல் மாசுபாடு கட்டுப்படுத்தப்பட்டுவருகிறது.
அதேநேரத்தில், சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்துவதில் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் இந்தியாவில் 23 விழுக்காடு திடீர் உயிரிழப்புகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்தியாவில் நிகழும் எட்டு மரணங்களில் ஒன்று சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக நிகழ்கிறது. இதன் காரணமாக குடிமக்களின் சராசரி ஆயுள் காலம் 1.7 ஆண்டுகள் குறைந்துள்ளன. Indian Council of Medical Research (ICMR) கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கை இந்த புள்ளி விவரத்தை தெரிவித்துள்ளது.
இருந்தபோதிலும், சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக இந்தியர்களின் சராசரி ஆயுள் காலம் குறைந்ததற்கான ஆய்வுகள் எதுவும் இந்தியாவில் மேற்கொள்ளப்படவில்லை என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருப்பது பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்தியா சுற்றுச்சூழல் தூய்மையில் தற்போது ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுவது அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதை சர்வதேச ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தொழிற்சாலைகள், நகரமயமாக்கல் மூலமாக சுற்றுச்சூழல் எவ்வாறு மாசுபட்டுக் கொண்டிருக்கிறது என்பது குறித்து இந்தியா ஆய்வு செய்ய வேண்டும் என்று GAHP வலியுறுத்தியுள்ளது. ரசாயண கழிவுகள் கலந்த நீரை பயிர்களுக்கு பாய்ச்சுவதன் மூலம் உற்பத்தியாகும் உணவுப் பொருட்கள், மனிதர்களின் ஆரோக்கியத்தை மிகப்பெரிய அளவில் பாதிக்கிறது. நாம் சமைக்கும் உணவு எந்த அளவு ஆபத்தானது என்பதை இது உணர்த்துகிறது.
நஞ்சு நிறைந்த சுற்றுச்சூழல், மனித உயிர்களுக்கு விளைவிக்கும் தீங்குகளைக் களைய மத்திய அரசு ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. காற்று மற்றும் தண்ணீரில் மனிதர்களால் ஏற்படுத்தப்படும் மாசு ஆசிய பசுபிக் நாடுகளில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது குறித்து 25 ஆண்டுகளுக்கு முன்பே ஆசிய வளர்ச்சி வங்கி எச்சரித்தது. எனினும், அந்த எச்சரிக்கை கண்டுகொள்ளப்படவேயில்லை.
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், உலக வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் பட்டியலிட்டுள்ளன. எனினும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் சர்வதேச அளவில் இந்தியா அதன் மதிப்பை இழந்துவருகிறது.
இந்தியாவில் காற்று, மண், தண்ணீர் ஆகியவை எந்த அளவு மாசுபட்டிருக்கின்றன என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நாட்டில் உள்ள நதிகளில் பெரும்பாலானவை குடிப்பதற்கு தகுதியற்றவை என்பது குறித்து மத்திய அரசே அறிக்கை வெளியிட்டுள்ளது. காற்று மற்றும் நீரில் ஏற்படும் மாசை கட்டுப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஊழல் நிறைந்த அமைப்பாக மாறிவிட்டது.
சீனாவில் உள்ள மாசுக் கட்டுப்பாட்டு அமைப்புகளின் நேர்மையான நடவடிக்கைகள் காரணமாக அங்கு காற்று மாசு, தண்ணீர் மாசு பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுத்தால்போதும், எத்தகைய சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும் என்ற நிலைதான் இந்தியாவில் உள்ளது.
இந்தியாவின் மாநகரங்களிலும் நகரங்களிலும் அதிகரித்துவரும் மாசு எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகிறது என்பது கடவுளுக்கே வெளிச்சம். சுற்றுச்சூழல் மாசினை கட்டுப்படுத்த ஐந்து ஆண்டு திட்டத்தை சீனா அமல்படுத்தியது. ஐஸ்லாந்து, ஃபின்லாந்து, எஸ்டோனியா ஆகிய நாடுகள், குடிமக்களின் பங்களிப்போடு சுற்றுச்சூழலை தூய்மையாக பராமரித்து வருகின்றன.
குடியிருப்புப் பகுதிகள், அலுவலகங்கள், சாலைகள், நீர் நிலைகள் ஆகியவற்றை தூய்மைப்படுத்துவதற்கான திட்டங்களை அரசு கையில் எடுத்து, ஒரு இயக்கமாக இதனை மேற்கொண்டால் மட்டுமே இந்தியாவில் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும்.
இதையும் படிங்க: முத்ரா திட்டமும், பொதுத்துறை வங்கிகளின் அலட்சியமும்!