மகாராஷ்ட்ராவில் கடந்த 2014 சட்டப்பேரவை தேர்தலின்போது, தேவேந்திர பட்னாவிஸ் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் அவர் மீதான இரு குற்ற (கிரிமினல்) வழக்குகள் இடம்பெறவில்லை. இது குறித்து வழக்குரைஞர் ஒருவர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக மாவட்ட நீதிமன்றம், பட்னாவிஸ்க்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸூக்கு எதிராக அவர் மும்பை உயர் நீதிமன்றத்தை நாடினார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், தேவேந்திர பட்னாவிஸ் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தேவேந்திர பட்னாவிஸ் மறுஆய்வு மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருதா போஸ் ஆகியோர் விசாரித்து தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று வாசித்த நீதிபதிகள், “வழக்கில் மேல்முறையீட்டுக்கு எந்த அவசியமும் இல்லை. ஆகவே தள்ளுபடி செய்கிறோம்” என்றனர். இதனால் தேவேந்திர பட்னாவிஸ் வழக்கு விசாரணையை எதிர்கொள்ளவிருக்கிறார்.
தேவேந்திர பட்னாவிஸ் மீது நாக்பூரைச் சேர்ந்த வழக்குரைஞர் சதீஷ் உகே என்பவர்தான் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், “மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் குற்ற விவரங்களை மறைத்தது தண்டனைக்குரிய குற்றம். அதற்கு விளக்கம் தாருங்கள்” என்று நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு பட்னாவிஸ் பதில் அளிக்கவில்லை. மாறாக உயர் நீதிமன்றம் சென்றார்.
பட்னாவிஸின் வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்தாண்டு விசாரணையைத் தொடங்க தடையில்லை என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்றார். அங்கும் அவருக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
மகாராஷ்ட்டிராவில் பாஜக, சிவசேனா ஆட்சியமைந்த போது, முதலமைச்சராக இருந்தவர் தேவேந்திர பட்னாவிஸ். இவர் மீது, கடந்த 1996, 1998ஆம் ஆண்டுகளில் ஏமாற்றுதல் மற்றும் மோசடி உள்ளிட்ட வழக்குகள் பதிவாகியிருந்தன. தேவேந்திர பட்னாவிஸ் மீதான வழக்கின் முக்கிய அம்சமே, “மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 125ஏ பிரிவின் கீழ் இந்த வழக்கு வருமா அல்லது இல்லையா? என்பதுதான்.
இந்த நிலையில் பட்னாவிஸூக்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளது. ஆகவே, இந்த தீர்ப்பு, குற்றத் தகவல்களை மறைத்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த மற்ற உறுப்பினர்களையும் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டெல்லி கலவரம்: துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது