ராணுவ தினத்தன்று மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராணுவப் படைத் தலைவர் ஜெனரல் எம்.எம். நாரவனே, "நாங்கள் அரசியலமைப்புக்கு கட்டுப்பட்டவர்கள். வீரர்களாக இருந்தாலும் சரி, உயர் அதிகாரிகளாக இருந்தாலும் சரி அரசியலமைப்பைக் காப்பதற்காகவே உறுதியெடுத்துள்ளோம். அதுவே, எங்களை வழிநடத்துகிறது. நம் அரசியலமைப்பின் முன்னுரையில் நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை கூறப்பட்டுள்ளது. அவற்றிற்காகத் தான் நாங்கள் போராடுகிறோம்" என்றார்.
குறிப்பாக அவர், இந்திய ராணுவத்தின் ஒவ்வொரு வீரனும் "இந்திய அரசியலமைப்பிற்கு உண்மையாகவும் நம்பிக்கையையுடனும் இருப்பேன்" என்றே உறுதியேற்கிறான் எனத் தெரிவித்தார். இது அனைவரும் அறிந்த ஒன்றே என்ற போதிலும், ராணுவத்தில் அரசியலின் தாக்கம் அதிகரித்துள்ளதாக விமர்சனங்களும் மறுபக்கம் எழுந்துவருகின்றன. அதனால்தான் மேற்கூறிய கருத்து மிக முக்கியமானதாகவும் வலிமையானதாகவும் கருதப்படுகிறது. அண்மையில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் குறித்து தற்போதைய முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் கருத்துக்களை, எதிர்க்கட்சித் தலைவர்களும் சில ராணுவ வீரர்களும் விமர்சித்திருந்தனர்.
'தேசமே அனைத்தையும் விட முதன்மையானது' என்பதே ராணுவ நெறிமுறையின் அடிப்படை. நாட்டின் நலனுக்காகவே ராணுவம் உள்ளதே தவிர, ராணுவத்திற்காக எந்தவொரு நாடும் கட்டமைக்கப்படவில்லை. எந்தவொரு ஜனநாயகத்தை எடுத்துக்கொண்டாலும் மக்களின் விருப்பமானது, அவர்கள் தேர்ந்தெடுத்த அரசியல் தலைமை மூலமாகவே வெளிப்படுத்தப்படுகிறது. “அரசியல் கருத்துகளை ராணுவத்தில் திணிப்பது நியாயமற்றது. கொள்கைதான் போரை உருவாக்குகிறது; போர் என்பது வெறும் கருவி மட்டுமே. எனவே, ராணுவக் கண்ணோட்டத்தை அரசியலில் திணிப்பது வேண்டுமானால் சாத்தியமாகலாம்” என்கிறார் கிளாஸ்விட்ஸ்.
இருப்பினும், ராணுவத்தில் அரசியல் என்பது ஒரு சாரரின் அரசியல் கருத்துகளை முற்றாக ராணுவம் ஏற்றுக்கொள்கிறது என்பதில்லை. ராணுவ சமூகவியலில் முன்னணி அறிஞரான மோரிஸ் ஜானோவிட்ஸ் தனது 'The Professional Soldier' என்ற புத்தகத்தில், “ராணுவத்தின் நடவடிக்கைகளில் ஆழமான அரசியல் விளைவு உள்ளது. ஆனால், காலங்காலமாக ராணுவ அதிகாரிகள் எந்தவொரு ஒரு அரசியல் சித்தாந்தத்திற்காகவும் போராடவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
ராணுவத்திலிருந்து அரசியலை விலக்கி வைக்க நல்ல காரணங்கள் பல உள்ளன. அவற்றில் முதன்மையானது தொழில்முறை. குடிமக்களுக்கும் - ராணுவத்திற்குமான உறவுகளைப் பற்றி ஆராய்ந்த அறிஞர்கள் பலர் ராணுவத்தின் தொழில்முறையையும் அதன் அரசியல் சார்பற்ற தன்மையையும் நேரடியாக இணைக்கின்றனர். ராணுவத்தையும் அரசியலையும் விலக்கி வைத்தால், அதன் தொழில்திறன் அதிகரிக்கும். மேலும், ராணுவம் என்பது பொதுமக்களின் கட்டுப்பாட்டை உடனடியாக ஏற்றுக்கொள்ளும். எந்தவொரு ஜனநாயகத்திற்கும் இது ஒரு வரவேற்கத்தக்க நிலைமைதான்.
இன்னும் ஒரு முக்கிய விஷயத்தை இங்கு குறிப்பிடவேண்டும். ராணுவத்தை அரசியலிலிருந்து விலக்கி வைப்பது மட்டுமல்லாமல், அரசியல்வாதிகள் வழக்கமான திட்டங்களிலும் செயல்பாட்டு முடிவுகளிலிருந்தும் ராணுவத்தை விலக்கிவைத்திருப்பது தொழில்திறனை அதிகரிக்கும். அனைத்து அரசியல்வாதிகளும் ராணுவத்தை தங்கள் அரசியல் கருத்துக்களிலிருந்தும் விவாதங்களிலிருந்தும் ஒதுக்கிவைத்தால் அது தேசநலனுக்கு உதவும். காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ராணுவத் தலைவரை "குறைவாகப் பேசி, அதிக வேலை செய்யவும்" என்று விமர்சித்திருந்தது முற்றிலும் தேவையற்ற ஒன்று. சாமுவேல் ஹண்டிங்டன், தனது The Soldier and the State என்ற புத்தகத்தில், “ராணுவத்தின் தரத்தை பொதுமக்களும் கடைப்பிடித்தால், பாதுகாப்பின் தரம் அதிகரிப்பதைக் காணலாம்” என்று கூறியுள்ளார்.
நாட்டிற்குச் சேவை செய்வதுதான், ராணுவத்தின் அடிப்படை. எனவே, நாட்டின் அடிப்படை, அதாவது அரசியலமைப்பிற்கு ராணுவத்தினர் மதிப்பளிக்கவேண்டும். ராணுவத்தின் மீது பொதுமக்கள் கட்டுப்பாடு என்பது அதிகாரத்தில் இருக்கும் அரசிற்கு விசுவாசமாக இருப்பது என்று அர்த்தப்படுவதாக சிலர் விமர்சிக்கின்றனர். அவர்களின் இந்தக் கருத்து, நியமானதைப் போல தோன்றலாம். இதனால் இறுதி முடிவு எடுப்பது என்பது தொழில்முறைக்குப் பதிலாக விசுவாசத்தினால் என்ற நிலைமை ஏற்பட்டுவிடும்.
ராணுவ வீரர்கள் தினமும் மரணத்துடனேயே சன்டையிடுகின்றனர். ஒன்று இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் நடக்கும் துப்பாக்கிச் சூடாக அமையும், இல்லையேன்றால், கார்கில் மற்றும் சியாச்சின் போன்ற இடங்களில் இருக்கும் மிக மோசமான வானிலையாக அது இருக்கும். வீரர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையை விட நாட்டிற்காகவே அதிகம் சேவை செய்கிறார்கள். எந்த அரசியல் கட்சி ஆட்சியில் இருந்தாலும், நாட்டிற்காக அவர்கள் செய்யும் சேவையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படப்போவதில்லை.
![Politics in military](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5734322_fd-1.jpg)
40 ஆண்டுகளாக ராணுவத்திற்குச் சேவை செய்தவன் என்ற முறையில், ராணுவப் படைத் தலைவரின் சமீப கருத்துகள் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. சமீப காலங்களில் மூத்த பாதுகாப்புப் படைத் தலைவர்களின் சில கருத்துக்கள் தேவையற்றது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் புதிய ராணுவத் தலைவர் தனது கருத்துகளை பின்பற்றுவார் என்று நம்புகிறோம். இந்திய ராணுவம் இந்தியாவின் மிகச்சிறந்த நிறுவனங்களில் ஒன்றாகும். ஆனால் அவை கூட சில சமயங்களில் நம்மிடமிருந்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறி முடிக்கிறார் ஓய்வுபெற்ற லெப்டினென்ட் ஜெனரல் டி.எஸ். ஹூடா.
இதையும் படிங்க: வாழ்வதற்கான உரிமையை உறுதிபடுத்துமா நகராட்சி அமைப்புகள்?