நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதனிடையே, கடும் எதிர்ப்புக்கிடையே நேற்று மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது. இந்நிலையில், காஷ்மீர் பதற்றமாக இருக்கிறது, அங்குள்ள தலைவர்களை எப்போது விடுதலை செய்வீர்கள் என மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த உள் துறை அமைச்சர் அமித் ஷா, "இயல்புநிலைக்கு காஷ்மீர் திரும்பிவிட்டது. அரசியலமைப்புச் சட்டம் 370 நீக்கப்பட்டதற்கு பிறகு அங்கு ரத்த ஆறு ஓடும் காங்கிரஸ் எதிர்பார்த்தது. ஆனால், அதுபோன்று ஏதும் நடக்கவில்லை.
ஒரு துப்பாக்கி குண்டுகூட வெடிக்கவில்லை. மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்கள் உள்பட அரசியல் தலைவர்களை விடுதலை செய்வதில் மத்திய அரசு தலையிடாது. சம்பந்தப்பட்ட நிர்வாகமே அந்த முடிவை எடுக்கும்" என்றார்.
முன்னதாக, காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்புத் தகுதியை ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா கொண்டுவந்ததன் மூலம் மத்திய அரசு நீக்கியது. இதனைத் தொடர்ந்து, இயல்புநிலை பாதிக்கப்பட்டு காஷ்மீரின் முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இணைய சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குடியுரிமை சட்டம் குறித்து அமெரிக்க கருத்து - இந்தியா கடும் கண்டனம்