ஹைதராபாத்: வாரங்கல் கொலை குறித்து காவல் ஆணையர் செய்தியாளர்களைச் சந்தித்து கொலைக்கான காரணத்தை விளக்கிக் கூறினார்.
வாரங்கல் கொலைகள் குறித்த முழு தகவல்களையும் காவல் ஆணையர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அதில்,
ஐந்து வருடத்திற்கு முன் மசூதை சந்தித்துள்ளார் சஞ்சய். தனிமையில் இருந்த சஞ்சய்க்கு ஆதரவாக இருந்துள்ளது மசூதின் குடும்பம். இவ்வேளையில் தான் மசூதின் மனைவி தங்கையான ரஃபிகாவிடம் சஞ்சய்க்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
ரஃபிகா மகளுடன் கணவனைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. ஆனால், சஞ்சய் ரஃபிக்காவை உடன் வைத்துக்கொண்டே, அவர் மகள் மீது நோட்டமிட்டுள்ளார்.
மகளையும் தன்வசமாக்கிய சஞ்சயின் காதல் நாடகம் குறித்து ஒரு கட்டத்தில் ரஃபிகா அறிந்துள்ளார். உடனே இதுகுறித்து அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட விரக்தியில், ரஃபிகாவை திர்த்துகட்ட திட்டம் தீட்டியுள்ளார் சஞ்சய்.
அதன்படி, மசூத் குடும்பத்தினரிடம் தான் ரஃபிகாவை திருமணம் குறித்து பேச கொல்கத்தா அழைத்து செல்கிறேன் என்று கூறி சஞ்சய் அழைத்துசென்றுள்ளார். இருவரும் தொடர்வண்டியில் பயணம் செய்யும் நேரத்தில், மோரில் மயக்கமருந்து கலந்து ரஃபிகாவுக்கு கொடுத்துள்ளார்.
இதையறியாத ரஃபிகா அதனை குடித்து மயக்கமடைந்தார். உடனடியாக எந்தவித மனசாட்சியும் இன்றி, கொடூர எண்ணத்துடன் ரஃபிகாவை தொடர்வண்டியிலிருந்து கீழே தள்ளி கொன்றுவிட்டு, மீண்டும் வாரங்கல் திரும்பியுள்ளார்.
கொலை நாடகமாடிய சஞ்சய், ரஃபிகா அவரது உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளதாக மசூத் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். சில நாட்கள் செல்லவே, மசூத் மனைவி நிஷா அலம்மிற்கு சந்தேகம் எழ, சஞ்சயை பிடித்து தனது தங்கையின் நிலையை குறித்து கேட்டுள்ளார். தன் தங்கை எங்குள்ளார் என்று சொல்லவில்லை என்றால் காவல் துறையை நாடுவேன் என்று நிஷா மிரட்டியுள்ளார்.
இதில் மேலும் வெறுப்படைந்த கொலையாளி சஞ்சய், மசூதின் குடும்பத்தை மொத்தமாக தீர்த்துகட்ட முடிவு செய்துள்ளார். பின்னர், அதற்கான முன்னேற்பாடாக 60 தூக்கமாத்திரைகளை மே 18ஆம் தேதி வாங்கி வைத்து சரியான தருணத்திற்காக காத்திருந்துள்ளார்.
அந்நேரத்தில் தான் மசூதின் பேரன் பிறந்தநாள் விழா மே 20ஆம் தேதி வருவதை அறிந்துகொண்டு, தன் திட்டத்தை அன்றே செயல்படுத்த முடிவெடுத்துள்ளார் கொடூர கொலையாளி சஞ்சய்.
அதன்படி அனைவருக்கும் உணவில் தூக்கமாத்திரைகளை கலந்துகொடுத்து, அனைவரும் மயங்கியபின், ஒருவர்பின் ஒருவராக தூக்கி அருகில் இருந்த கிணற்றில் எறிந்துள்ளர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும், கிடங்கில் இருந்த கண்காணிப்புப் படக்கருவியின் மூலம் பதிவான காட்சிகளை வைத்து தான் சஞ்சய் பிடிபட்டார் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.