காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இடையேயான சந்திப்பு இன்று நடக்கவுள்ளது. இதனால், நகரம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இன்று மதியம் 1:30 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.
ஐ.டி.சி. கிராண்ட் சோழாவில் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் சீன அதிபர் மாமல்லபுரத்தில் உள்ள அர்ஜுனன் தபசுவிற்கு செல்லவுள்ளார். இங்குதான் நரேந்திர மோடி, ஸி ஜின்பிங் இடையேயான முதல் 'மாமல்லபுரம்' சந்திப்பு நடக்கவுள்ளது. அங்கு கடற்கரை அருகிலுள்ள கிருஷ்ணா வெண்ணெய் பந்து பகுதியில் இருநாட்டுத் தலைவர்களும் சிறிது நேரம் நடைபயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
இருநாட்டுத் தலைவர்களும் ரதக் கோயில், கடற்கரை கோயில் ஆகியவற்றை பார்வையிட்ட பின்னர் கலாஷேத்திர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவுள்ளனர். முதல்நாள் பயணத்தை முடித்துவிட்டு சீன அதிபர் மீண்டும் ஐ.டி.சி. கிராண்ட் சோழாவுக்கு சென்று அங்கு தங்கவுள்ளார்.