மத்திய அரசின் சுயத்திட்டமிடல் திட்டத்தின்கீழ் பயனடைந்த மத்தியப் பிரதேச மாநில சாலையோர வியாபாரிகளிடம் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலமாக உரையாடினார். இந்த உரையாடலின்போது தற்சார்பு பொருளாதாரத்தின் முக்கியத்துவம் குறித்து அவர் வலியுறுத்திப் பேசினார்.
அதில், ”சுயத்திட்டமிடல் திட்டத்தின் மூலம் பயனடைய வியாபாரிகள் உரிய ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் இணைந்து பயன்பெறுவதற்கு அனைத்து சேவை மையங்களையும் வியாபாரிகள் அணுகலாம்.
குறைந்த வட்டியில் தொழில் செய்வதற்கான மூலதனத் தொகையை வியாபாரிகள் இந்தத் திட்டத்தின் மூலம் பெறலாம். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை பயன்படுத்தி வியாபாரிகள் எளிதான முறையில் தங்கள் வியாபாரங்களை மேற்கொள்வது வரவேற்கத் தகுந்த அம்சமாகும்.
வியாபாரிகள் தங்களின் சொந்த பயன்பாடுகள், தொழில் சார்ந்த தேவைகளுக்கு பிளாஸ்டிக் கோப்பைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருள்களை தவிர்ப்பது நலம். குடிநீர் போன்ற தேவைகளுக்கு மண் பானையை பயன்படுத்துவது நலம். மேலும், சுழற்சி முறையில் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்துவது சிறப்பு” என பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதையும் படிங்க: #9Baje9Minute: இன்று இரவு 9 மணிக்கு விளக்குகளை அணைக்க அகிலேஷ் யாதவ் அழைப்பு!