ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்தது. அதுமட்டுமின்றி, ஒரே மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் மத்திய அரசு பிரித்தது.
இதற்குப் பல்வேறு தரப்புகளில் இருந்தும் கடுமையான எதிர்ப்புகள் வெளியானபோதும், மத்திய அரசு தனது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. ஜம்முவின் முன்னாள் முதலமைச்சரும், நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான ஃபருக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்களை வீட்டுச் சிறையில் வைத்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திடம் இருந்து சிறப்பு அந்தஸ்தை நீக்கியதன் மூலம், அங்கு இந்திய அரசுக்கு இருக்கும் உரிமையை மட்டுமின்றி, பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் இல்லை என்பதையும் பிரதமர் மோடி வெளிப்படுத்தியிருப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தரா நகரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார்.
அதேபோல், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் ராகுல் காந்தியின் நிலைப்பாடு என்ன என்பதை அவர் இந்திய மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அமித் ஷா வலியுறுத்தினார்.