சீன அதிபர் ஜி ஜின்பிங் மூன்று நாள் சுற்றுப்பயணமாக அக்டோபர் 11ஆம் தேதி இந்தியா வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தச் சந்திப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இன்று வெளியிட்டது.
அதில், "பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான சந்திப்பு தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இருநாட்டுத் தலைவர்களும் அக்டோபர் 11, 12 ஆகிய தேதிகளில் முறைசாரா உச்சி மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
இந்த உச்சி மாநாட்டில் இருநாட்டு உறவுகள், சர்வதேச அளவில் நிலவும் முக்கிய பிரச்னைகள் குறித்து பேசப்படுகிறது. மேலும் இந்தியா - சீனா உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் எல்லையில் அமைதியை நிலைநாட்டுவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இந்தச் சந்திப்பு குறிப்பிட்ட ஒரு விவகாரம் தொடர்பாக நடத்தப்படவில்லை. இதில் எந்தவொரு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகப்போவதில்லை. மேலும், இருநாட்டுத் தலைவர்களும் இந்தச் சந்திப்பின்போது, அடுத்ததாக இருநாட்டு சிறப்புப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தைக்கான தேதியையும் முடிவு செய்யவுள்ளனர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
முன்னதாக கடந்தாண்டு பிரதமர் மோடி - ஜி ஜின்பிங் இடையே வுஹான் நகரில் முதல் உச்சிமாநாடு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நடைபெறும் இந்தச் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.