கரோனா தடுப்பூசி இரண்டாம்கட்ட ஒத்திகை நாடு முழுவதும் இன்று நடைபெற்ற நிலையில், வரும் ஜனவரி 11ஆம் தேதி, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கரோனா தடுப்பூசி விநியோகம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா, அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் இணைந்து தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசிக்கும் - பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இணைந்து தயாரித்த கோவாக்சின் தடுப்பூசிக்கும் அவசரகாலப் பயன்பாட்டிற்கான அனுமதியை இந்தியத் தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஜனவரி 3ஆம் தேதி வழங்கியது.
இதற்கிடையே, சென்னையில் நடைபெற்ற தடுப்பூசி ஒத்திகையை ஆய்வுமேற்கொண்ட மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், விரைவில் கரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிவித்திருந்தார். மருத்துவ ஊழியர்கள், முதியோர், கரோனா முன்களப் பணியாளர்கள் ஆகியோருக்கு முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.