உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூர் பகுதியில் பொதுமக்கள் முன்னிலையில் பிரதமர் மோடி இன்று தனது தேர்தல் பரப்புரையை நிகழ்த்தினார். அப்போது, பாலகோட் பகுதியில் பயங்கரவாதிகள் மீது விமானத் தாக்குதல் நிகழ்த்திய சம்பவத்திற்கு எதிரான கருத்துகளை கூறிவரும் காங்கிரஸ் கட்சியை மோடி கடுமையாக விமர்சித்தார்.
பயங்கரவாதிகளின் இருப்பிடத்திற்கே சென்று, அவர்கள் மீது தாக்குதல் நிகழ்த்திய நமது வீரர்களின் தீரமிகு செயல்கள் குறித்து கேள்வி எழுப்புவது நியாயமா? என்றும், தேசத்திற்கு எதிராக கருத்துகளை கூறி காங்கிரஸ் கட்சியினர் பாகிஸ்தான் மத்தியில் கதாநாயகன் ஆவதை மக்கள் மன்னிப்பார்களா? என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
இது குறித்து மேலும் அவர் பேசுகையில், இந்திய பாதுகாப்புப்படை நவீனரக ஆயுதங்கள், ரஃபேல் விமானங்கள், புல்லட் துளைக்காத ஆடைகள், ஒன் ரேங்க் ஒன் ஓய்வூதியம் போன்றவைகளை வழங்குமாறு முந்தைய அரசிடம் கோரிக்கைவைத்தது. ஆனால், காங்கிரஸ் கட்சியோ வீரர்களுக்கு நவீன ரக ஆயுதங்களை வழங்காமல், அவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தது என குற்றம்சாட்டினார்.
மக்களின் உணர்வுகளை காங்கிரஸ் கட்சி ஒரு போதும் புரிந்து கொள்ளாது என புகார் தெரிவித்த அவர், பாதுகாப்புப்படை வீரர்களிடம் காங்கிரஸ் கட்சி எப்படி நடந்து கொண்டதோ, அதேபோல்தான் விவசாயிகளிடமும், ஏழைகளிடமும் நடந்து கொள்கிறது என விமர்சனம் செய்தார்.
கடந்த 40 வருடங்களாக வறுமையை ஒழிப்போம் என காங்கிரஸ் கூறி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் பொய் கூற்றுக்கு இதுவே மிகப்பெரிய உதாரணம் எனப் பேசினார்.