இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையே கடந்த மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து எல்லையில் பதற்றம் நிலவிவருகிறது. இரு தரப்பும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில், இன்று லடாக்கின் நிம்மு பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி, களநிலவரத்தை ஆய்வு செய்தார். அவருடன் முப்படைகளுக்கான தலைமை தளபதி பிபின் ராவத்தும் ராணுவத் தளபதி நரவனேவும் உடன் சென்றனர்.
அப்பகுதியில் முகாமிட்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள், விமானப் படையினர், ஐ.டி.பி.பி (ITBP) வீரர்கள் உள்ளிட்டோரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். மேலும், கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலில் காயமடைந்த இந்திய வீரர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதைத்தொடர்ந்து, பிரமதர் மோடி ராணுவ வீரர்கள் மத்தியில் பிற்பகல் 2 மணியளவில் உரையாற்றினார். அப்போது, படைமாட்சி அதிகாரத்தில் இடம் பெற்றுள்ள, திருக்குறள் ஒன்றையும் அவர் குறிப்பிட்டுப் பேசினார்.
மோடி மேற்கோள்காட்டிய திருக்குறள்
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு
பொருள்
வீரம், மானம், சிறந்த வழியில் நடக்கும் நடக்கை, தலைவரால் நம்பித் தெளியப்படுதல் ஆகிய இந்த நான்கு பண்புகளும் படைக்கு சிறந்தவையாகும். இந்த திருக்குறளை மேற்கோள்காட்டிய பிரதமர் மோடி, ஹிந்தியில் அதற்கான விளக்கத்தையும் அளித்தார்.
இதையும் படிங்க: ஆக்கிரமிப்பு சக்திகளின் காலம் மலையேறிவிட்டது - சீனாவைச் சீண்டிய பிரதமர் மோடி