படிக்க வயது தேவை இல்லை என்பது அசாத்தியமான உண்மை. தள்ளாத வயதிலும் மூதாட்டிகள் பலர் கல்வி மீது வைத்துள்ள ஆர்வம் இன்றைய இளைஞர்களின் புருவங்களை உயர்த்த வைப்பதோடு, சிந்திக்கவும் வைக்கிறது. நேரமும், காலமும் ஓடிவிடும் தான் ஆனால், அவற்றை பிடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் விட்டுவிடக்கூடாது. அந்த வகையில், சிறுவயதில் படிக்க முடியாத மூதாட்டி, 98 வயதில் நான்காம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது மட்டுமின்றி, அவர்களிடம் இருந்து வாழ்த்துகளையும் பெற்று வருகிறார்.
சர்வதேக மகளிர் தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற நரி சக்தி புரஸ்கார் (Nari Shakti Puraskar) விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், சாதித்த 15 பெண்களுக்கு விருதுகளை வழங்கினார். விருது பெற்றவர்களின் வாழ்க்கை, சாதனைகள் குறித்து அறிந்ததும் அரங்கத்திலிருந்த பலரையும் ஒரு நிமிடம் நாம் என்ன செய்திருக்கிறோம் என்பதை கண்டிப்பாக யோசிக்க வைத்திருக்கும்.
விருது வாங்கிய அனைவரையும் தனது இல்லத்திற்கு அழைத்து பிரதமர் மோடி உரையாடினார். அப்போது , பிரதமர் மோடியுடன் உரையாடிய கேரளாவைச் சேர்ந்த கார்த்தியானி மூதாட்டி, " நான்காம் வகுப்புகான தேர்வில் 98 விழுக்காடுப் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளேன். எனக்கு மேலும் படிக்க ஆசை உள்ளது. தற்போது கணினி தொடர்பான பாடங்களையும் கற்கத் தொடங்கியுள்ளேன்" என்றார்.
இந்த மூதாட்டியன் நம்பிக்கையும், ஆர்வமும், தன்னம்பிக்கை இழந்தவர்களுக்கு புதிய உத்வேகத்தை கொடுக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை. இதேபோன்று கேரள மாநில எழுத்தறிவு பணியின் கீழ், நான்காம் வகுப்பில் தேர்வில் தேர்ச்சி பெற்ற 105 வயதான பகிரதி மூதாட்டிக்கும் விருது கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கொராேனா வைரஸ் எதிரொலி - தமிழ்நாட்டில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு நிறுத்தம்!