அரவிந்த் கெஜ்ரிவால் 1968ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி, ஹரியானா மாநிலத்திலுள்ள சிவானி பகுதியில் பிறந்தார். இன்று தனது 52ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும், அவருக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலர் பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
ட்விட்டரில் கெஜ்ரிவாலுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, 'டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். நான் அவருடைய நீண்ட நலமான வாழ்விற்காக பிரார்த்தனை செய்கிறேன்' எனக் கூறியிருந்தார். பிரதமரின் இந்தப் பதிவிற்கு அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்தார்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் தனது ட்விட்டர் பதிவில், 'பிறந்த நாள் வாழ்த்துகள் அரவிந்த் கெஜ்ரிவால். உங்களுடைய வாழ்க்கையில் நலமும், மகிழ்ச்சியும் பெருக வாழ்த்து தெரிவிக்கிறேன்' எனக் கூறினார்.
டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் அவரது ட்விட்டர் பதிவில், 'பிறந்த நாள் வாழ்த்துகள் அரவிந்த் கெஜ்ரிவால். நீங்கள் அரசியலை மறுவரையறை செய்து, இந்தியாவில் மில்லியன் கணக்கான இளைஞர்களை வழி நடத்தியுள்ளீர்கள். நாட்டில், தூய்மையான அரசியல் சாத்தியமாகும் என்பதை உங்கள் ஆட்சி நிரூபித்துள்ளது. உங்களது வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருக வாழ்த்துகள்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக டெல்லி முதலமைச்சராக பதவி வகித்து வரும், அரவிந்த் கெஜ்ரிவால் கரோனா வைரஸ் பாதிப்பினைக் கருத்தில் கொண்டு, தனது 52ஆவது பிறந்த நாளைக் கொண்டாடப் போவதில்லை எனவும்; தனது நலம் விரும்பிகள் தனக்குப் பிறந்தநாள் பரிசு வழங்குவதற்குப் பதிலாக முடிந்த வரை கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களுக்கு ஆக்ஸிமீட்டர் கருவிகளை வழங்குங்கள் எனவும் கூறியிருந்தார்.