தனியார் முதலீடுகளை ஈர்த்து சுயசார்பு இந்தியாவை அடையும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 41 நிலக்கரி சுரங்கங்களின் ஏலத்தை பிரதமர் மோடி இன்று தொடக்கி வைத்தார். வீடியோ கான்பரன்சிங் மூலம் நிகழ்ச்சியை தொடக்கி வைத்த மோடி, ஏலம் விடுவதன் மூலம் நிலக்கரித் துறையை ஊரடங்கிலிருந்து விடுவித்துள்ளோம் எனத் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், "கரோனா மூலம் ஏற்பட்டுள்ள பேரிடரை, இந்தியா வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளும். இதன் மூலம் தற்சார்பு இந்தியாவை அடைய முடியும். இறக்குமதியை அதிகமாக சார்ந்திருப்பதைக் குறைக்க வேண்டும். ஏலம் விடுவதன் மூலம் நிலக்கரித் துறையை ஊரடங்கிலிருந்து விடுவித்துள்ளோம். பல ஆண்டுகளாக மின் துறை சிறை பிடிக்கப்பட்டிருந்தது. வெளிப்படைத்தன்மை இல்லாமலும், தனியார் நிறுவனங்களின் போட்டி இல்லாமலும் இருந்து வந்தது.
2014ஆம் ஆண்டுக்கு பிறகு, இந்த நிலைமையை மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் மூலம், மின் துறை வலுவடைந்தது. தனியார் நிறுவனங்களை அனுமதித்ததன் மூலம் நாட்டின் வளங்களை விடுவித்துள்ளோம். 2030ஆம் ஆண்டுக்குள் 100 மில்லியன் டன் நிலக்கரியைத் தயாரிக்க வேண்டும். இதனை இலக்காக வைத்துள்ளோம். இதற்காக நான்கு திட்டங்கள் வகுத்து, 20,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளோம். அடுத்த ஏழு ஆண்டுகளில், 33,000 கோடி ரூபாய் முதலீட்டை எட்டுவோம் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆயுதமின்றி இந்திய வீரர்களை அனுப்பியது ஏன்? ராகுல் காந்தி கேள்வி