இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக ஃபிரான்ஸ் சென்ற இந்தியப் பிரதமர் மோடிக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஃபிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பிரதமர் மோடியை வரவேற்றார். இதையடுத்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடியும் ஃபிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானும் இணைந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது மேக்ரான் கூறியதாவது:
இரண்டாவது முறையாக தேர்தலில் மோடி வெற்றிபெற்ற பிறகு, அவரை முதன் முறையாக சந்திக்கிறேன். உங்களது (மோடி) வெற்றிக்கு எனது வாழ்த்துகள். இந்த வெற்றி இந்தியாவின் ஜனநாயகம் எவ்வளவு சிறந்தது என்பதைக் காட்டுகிறது.
அதனுடன் நாங்கள் இருவரும் ஜி7 மாநாடு குறித்து பேசினோம். இந்த மாநாட்டில் இந்தியாவும் ஒரு முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என நான் எண்ணுகிறேன். ஜி7 மாநாட்டினை எப்படி நடத்த வேண்டும் என்பதில் சில மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளேன். ஏனென்றால், இந்த மாநாட்டில் இந்தியாவின் பங்களிப்பு இல்லாமல் பல தரப்பட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்க முடியாது.
நாங்கள் டிஜிட்டல், சைபர் பாதுகாப்பு, ஆப்ரிக்கா உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தினோம். நாங்கள் இணைந்து சில விஷயங்களை செய்ய உள்ளோம்; பிப்ரவர் 14ஆம் தேதி புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் குறித்தும் விவாதித்தோம். பயங்கரவாதத்திற்கு எதிராக தொடர்ந்து எங்களது பணிகளைச் செய்வோம். எங்களின் இந்தப் பாதுகாப்பு குறித்த பேச்சுவார்த்தை ஆனது நாங்கள் ஒருவர்மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது. மேலும், 'மேக் இன் இந்தியா'வில் எங்களின் உதவி கண்டிப்பாக இருக்கும்.
மேலும், முதல் ரஃபேல் விமானம் அடுத்த மாதம் இந்தியாவிற்குச் சென்றடையும். காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நபரின் தலையீடு இருக்கவே கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி பேசுகையில், "ஃபிரான்ஸ்-இந்தியா நாடுகளுக்கிடையேயான முக்கிய பேச்சுவார்த்தையுடன் சில முக்கிய முடிவுகளையும் செயல்படுத்த முடிவெடுத்துள்ளோம். ஃபிரான்ஸிடம் ஒப்பந்தம் செய்தவாறு 36 ரஃபேல் விமானங்களில் முதல் விமானம் அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது" எனத் தெரிவித்தார்.